திருவாரூர், மே 18
விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ராமசுப்ரமணியன் ஆகியோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா, கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரங்கள் நெடுங்காலமாக நெல் வயலில் போடப்பட்டவை. தற்போது, பசுந்தாள் உரமிடுவது குறைந்துவிட்டது. தற்போது, செயற்கை உர விலை உயர்வினால் பசுந்தாள் உரத்தின் தேவையை மறுபடியும் உணர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பசுந்தாள் உரமிடுவதன் பயன் என்னவெனில், விரைந்து மக்கிவிடும், பயிர்களுக்கு வேண்டிய தழைச்சத்தை முதன்மையாக கொடுக்கிறது, மண்ணுக்கு தழைச்சத்து மட்டுமன்றி, மணிச்சத்தையும், சாம்பல் சத்தையும் சேர்த்து கொடுக்கிறது. மண்ணுக்கு போரான் மாங்கனீசு, மயில் துத்தம், துத்தநாகம், இரும்பு, மாலிபிடினம், சுண்ணாம்பு மற்றும் சிலிக்கான் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை கொடுக்கின்றன. மேலும், பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. எனவே, பசுந்தாள் உரப்பயிரை நெல் சாகுபடி பயிர்த் திட்டத்தில் சேர்த்து அவைகளை நிலத்தில் மடக்கி உழவேண்டியது மிகவும் அவசியம். தற்போது, குப்பை மற்றும் தொழுவுரம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதால் பசுந்தாள் உரம் உபயோகிப்பது இன்றியமையாதது. எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றனர்.