August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி

புதுக்கோட்டை, ஆக. 4

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடிக்கு முன்பு பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். பசுந்தாள் உரப்பயிர்களின் வேர் முடிச்சுகளிலுள்ள பாக்டீரியாக்களின் உதவியினால் ஆகாயத்திலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இதனால் மண்ணில் தழைச்சத்து அதிகரித்து, மண்வளம் மேம்படுகிறது.

நிலத்திலுள்ள அங்ககப் பொருட்களின் அளவையும் அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நீர் பிடிப்பு திறன் அதிகமாகிறது. பசுந்தாள் உரப்பயிர்களை வளர்ப்பதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தக்கைப் பூண்டு மற்றும் சணப்பு விதைகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைப்பு செய்ய வேண்டும். 40-45 நாட்களில் பூப்பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு உழவு செய்வதால் ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

தக்கைப் பூண்டு:
Ø அனைத்து வகை நிலத்திலும் பயிரிடலாம். வடிகால் வசதியற்ற நிலங்களிலும், வறண்ட நிலங்களிலும் களர் நிலங்களிலும் நன்கு வளரும். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை போதுமானது. இது 40-45 நாள்களில் பூக்க ஆரம்பிக்கும் பொழுது மடக்கி உழவு செய்ய வேண்டும்.

சணப்பு
Ø இது வடிகால் வசதியுள்ள நிலங்களில் நன்கு வளரும். விதைத்த ஏழு வாரங்களில் சணப்புப் பயிரை நிலத்தில் மடக்கி உழலாம். வடிகால் வசதியுடன் கூடிய குறுமண் நிலங்களில் பயிர் செய்வது ஏற்றது.

கொளுஞ்சி
Ø மணற்சாரியான ஒரு போக நஞ்சைகளில் பயிர் செய்வதற்கு ஏற்றது. கடும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது மெதுவாக வளர்ந்து நிலத்தில் 6 முதல் 8 மாதம் வரை இருக்கும். கடும் வறட்சியையும் தாங்கக் கூடியது. மாடுகள் மேயாது. ஆகவே வேலியற்ற நிலங்களிலும் பயிர் செய்யலாம்.
Ø ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை விதைக்க வேண்டும். இதன் விதைகளை மணலுடன் கலந்து இலேசாகக் குத்தி விதைக்க வேண்டும்.
Ø ஒரு நிலத்தில் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தாற்போல், இதை விதைத்து பயிர் செய்வதனால், பின்னர் அந்நிலத்தில் தரையில் விழுந்து கிடக்கும் விதைகள் முளைத்து வருடாவருடம் பயிராகும். ஆடி, ஆவணி மாதங்களில் கொளுஞ்சிச் செடிகளை சேகரித்து நெல் வயல்களுக்கு உரமாக உபயோகிக்கலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற மண்வளத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Spread the love