January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் (Green manure and Green Leaf manure)

இயற்கையின் கொடையான மண் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். பயிரின் வளர்ச்சிக்கு மற்றும் நல்ல மகசூலுக்கு மண்வளம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்தே கிடைக்கின்றன. பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பயிர்கள் கிரகிக்கும் வகையில் மண் வளத்தைப்பேண வேண்டும். இத்தகைய மண் வளத்தை பேணிக்காப்பதில் முக்கியமானவை இயற்கை உரங்களான பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களாகும்.

தமிழ்நாட்டு மண் வகைகளில் கரிமப்பொருட்கள் அதாவது அங்ககப் பொருட்கள் மற்றும் தழைச்சத்து ஆகியவற்றின் அளவு குறைவாகவே உள்ளது. இதனால் மண்வள மேம்பாட்டில் இவை இரண்டும் இரண்டு கண்களாகவே கருதப்படுகின்றது. மேலும் கரிமச்சத்து அளவும் மிகவும் குறைவாகவே அதாவது 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் அளவும் மிகக் குறைந்தே காணப்படுகின்றன. இந்தப்பண்புகளை மேம்படுத்த ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் இயற்கை உரங்களை நிலத்தில் இடவேண்டும். இயற்கை உரங்களில் எளிதாகவும், மிகக்குறைந்த செலவிலும் கிடைப்பவை பசுந்தாள் பசுந்தழை உரப்பயிர்கள் ஆகும்.

நமது நாட்டில் பசுந்தாள் உரப்பயிர்களை விதைத்து சாகுபடி செய்து பின்பு அதே நிலத்தில் மடக்கி உழுவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். இதன் மூலம் அந்நிலத்தில் அதற்குப்பின்னர் பயிர் செய்யப்படும் பயிர் நல்ல வளர்ச்சியடைந்து அதிக மகசூல் பெறுவதற்கு வழிவகை செய்கின்றது. ஏனென்றால் வேர் முடிச்சுகளை வேர்களில் உருவாக்கி அதில் காற்றிலுள்ள தழைச்சத்தை சேமித்து வைக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்களாக தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, மணிலா, அகத்தி, சித்தகத்தி மற்றும் நரிப்பயறு பயிரிடப்படுகிறது. பசுந்தழை உரமானது பசுந்தழைகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து இடுவது ஆகும். புங்கன், எருக்கு, வேம்பு, கிளிரிசிடியா மற்றும் கொடிப்பூவரசு போன்றவை பசுந்தழை உரங்களாக பயன்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர்களில் தக்கைப்பூண்டு, சணப்பை மற்றும் கொளுஞ்சி மிகவும் முக்கியமானதாகும்.

தக்கைப்பூண்டு (Daincha)
தக்கைப்பூண்டு நீர் தேங்கும் பகுதியிலும் மற்றும் வறட்சி தாங்கி வளரக்கூடியதாகவும் இருக்கிறது. களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்றது. ஏனென்றால் இவற்றை மடக்கி உழும்போது மட்கும்போது உருவாகும் அங்கக அமிலங்கள் களர் மற்றும் உவர் தன்மையைக் குறைக்கிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகளை ஒரு கிலோ ரைசோபியம் உயிர் உரத்தை 1 ½ லிட்டர் ஆறிய அரிசி அல்லது மைதா கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்;தி விதைக்கவேண்டும். நன்றாக உழுத வயலில் விதைகளைத் தூவி மேலோட்டமாக டிராக்டரால் உழுது பாசனம் செய்ய வேண்டும். விதைத்தவுடன் முதல் நீரும் மூன்றாம் நாள் உயிர்நீரும் அடுத்ததாக 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்தலிருந்து 45 முதல் 60 நாட்களில் அதாவது பூக்கும்பொழுது அதை மடக்கி உழுது விட வேண்டும். இதன் மூலம் 10 டன் பசுந்தாள் கிடைக்கும்.

சணப்பை (Sunnhemp)
சணப்பை வடிகால் வசதி படைத்த நிலங்களில் நன்கு வளரும். அதிகபாசனம் மற்றும் தொடர்ந்து நீர் தேங்கும் பகுதிக்கு ஏற்றதல்ல. இவை நிழல்களிலும் நன்கு வளரும் என்பதால் தென்னையில் ஊடுபயிராகப் பயிரிடலாம். விதைத்து ஏழு வாரங்களில் சணப்புப்பயிரை நிலத்தில் மடக்கி உழலாம். இப்பயிர் இருக்கும் நிலங்களில் நூற்புழுக்கள் குறைவாகவே இருக்கும். மட்கும்போது அங்கக அமிலங்கள் வெளியாவதால் மண்ணின் களர் மற்றும் உவர் தன்மையைக் குறைக்கும். கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர் எடுத்து கொள்ள ஏதுவான சூழ்நிலையைக் கொடுக்கிறது. மகசூலாக ஏக்கருக்கு 6 டன் பசுந்தாள் கிடைக்கும். தக்கைப்பூண்டு சாகுபடி முளைகளை இப்பயிருக்கும் பின்பற்றலாம்.

கொளுஞ்சி (Tephrosia)
மணற்சாரியான ஒரு போக நஞ்சை நிலங்களில் பயிர் செய்யலாம். கடும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. ஆடு, மாடுகள் மேயாத காரணத்தினால் வேலியற்ற நிலங்களிலும் பயிர் செய்யலாம். இலகுவான மண்ணிற்கேற்ற கொளுஞ்சியை ஊடுபயிராகவும் தென்னந்தோப்புகளில் பயிரிடலாம். கொளுஞ்சியில் எம்.டி.யு1 என்னும் இரகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. விதைகள் மஞ்சள் நிறத்தில் திறட்சியாக இருக்கும். இதன் வளர்ச்சிக் காலம் பசுந்தாள் உரப்பயிருக்கு 65-75 நாட்கள், விதையெடுப்பிற்கு 120-150 நாட்கள் ஒன்பது டன் பசுந்தாளும், 400 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு முறை உழுது பயிரிட்டால் அடுத்தடுத்து தானாகவே முளைக்கும் தன்மை வாய்ந்தது.

பசுந்தாள் உரமிடுதலின் பயன்கள்

  1. மண்ணின் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் குணங்களை வேளாண்மைக்குச் சாதகமாக்குகிறது.
  2. மண்ணில் அங்ககப் பொருட்களின் தன்மையை நிலைப்படுத்துவது அதாவது கரிமச்சத்து விகிதம் அதிகரிக்கிறது.
  3. பசுந்தாள் உரப்பயிர்கள் மக்குவதால் சாகுபடி பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.
  4. கடினமான மண்ணில் நுண்துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் நீர் வடிகாலுக்கு உதவுகிறது.
  5. இளக்கமான மண்ணில் நீர் இருப்புத்திறனை அதிகரிக்கின்றது. நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது.
  6. பசுந்தாள் பயிர்களில் குறைந்துள்ள பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் பல களர் நில மேம்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கின்றது.
  7. அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நொதி மற்றும் சர்க்கரைப் பொருட்கள் வெளிப்படுவதால் கரையாத நிலையிலுள்ள சத்துக்களை கரைத்துப் பயிர்களுக்குக் கொடுத்து நன்கு வளரச்செய்யும்.
  8. கோடையில் இந்தப்பயிர்கள் நிலப்போர்வையாக அமைத்து நிலத்திலுள்ள நீர் ஆவியாதலைத் தடுப்பதால் மண்ணின் ஆழத்திலுள்ள கேடு விளைவிக்கும் உப்பினங்கள் மேலே வராமல் தடுக்கப்படும், தவிர்க்கப்படும்.
  9. மண்ணில் கரிமச்சத்து அதிகமாவதால், இரசாயன உரங்கள் ஆவியாதல், களியோடு சேர்ந்து நிலைகொள்ளல், பாசன நீருடன் கரைந்து வெளியேறுதுல் போன்ற இழப்புகள் குறைவதுடன் பயிர்களுக்கான சத்துக்கள் சீராகக் கிடைக்கும்.

ஆகவே மண் வளத்தை அதிகரிக்க விவசாய பெருமக்கள் தாங்கள் கடைபிடிக்கும் பயிர்ச் சுழற்சியில், பசுந்தாள் உரப் பயிர்களைச் சேர்த்துக் கொண்டால், மண் வளம் மேம்படுவதுடன் உயர் விளைச்சலும் பெறலாம் என்று மதுரை வேளாண்மைப் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்விரமேஷ் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் சீ.கிருஷ்ணகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Spread the love