பற்பல மரங்கள் நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்த சிறப்பு மர வகைகளில் மூங்கிலைவிட வறட்சி தாங்குவதிலும் நீடித்து நிலைத்து பாதுகாப்பு செய்வதிலும் சிறந்தது தான் பனைமரம். ஆம், பனை, விவசாயிக்கு எந்த சிரமமும் தராது. தன் வாளிப்பான இரும்பைவிட உறுதியால் எந்த புயலையும் சமாளிக்கும் அற்புத பயிர்.
மண் கண்டத்தை பல்வித உயிரினப் பெருக்கத்துக்கும் ஏற்றதாகச் செய்தும் காற்று, மழை மூலம் வளமான மண் திருடப்பட்டு இடம் பெயரவிடாது காக்கும் காவல் தெய்வம் பனையே. வறட்சியிலிருந்து மனிதனை காத்திட பதனீர், நுங்கு, திண்பண்டம், பானம் தருவதுடன் எரிப்பதற்குரிய பாகங்களையும் தரும். ஏன் அதுமட்டுமா? குடியிருக்க கட்டும் வீட்டுக்கு கூரை அமைத்திடவும் ஓலைகளைத் தருவது பனை மரம் தான்.
இவற்றை வளர்த்திட எந்தவித தனி கவனமும் தேவையில்லை. எல்லா மண்ணிலும் எவ்வித சரிவான பகுதியிலும், குளக்கரையிலும் ஆற்றின் கரையிலும் ஏன் எங்கு வேண்டுமானாலும் நாம் பனை மரத்தை விரும்பி நட்டு அழகு பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பனை மரம் 30 முதல் 50 அடி வரை வளரும் திறன் கொண்டது. இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு எத்தனையோ பயிர்களை நட விரும்பும் எவரும் பனையின் மாண்பை முழுமையாக அறியாததால் தான் நல்ல வரவு பெறுவதில்லை. விவசாயத்தில் லாபம் இல்லையென்ற அங்கலாய்ப்பு வேறு. செங்கல் சூலைக்கும், வாய்க்கால் பாதைக்கும் கட்டிடப் பணிக்கும் உதவுமே பனை. ஏன் எத்தனையோ குடிசைக்குள்ளே ‘நிலை’யாக பயன்தரும் பனை மரத்தின் பாகங்கள் சிறப்புமிக்கவை. பனைமரங்கள் அந்தக்காலத்தில் வரப்பை வலுப்படுத்தவும் ஒரு விவசாயிக்கும் அடுத்தவருக்கும் இடையில் வரப்பு தகராறு வராமல் தடுத்த காவல்கார தெய்வங்களே.
அதிகநீர் தேவைப்படும் இளநீர் தரும் தென்னை மரங்களை தேடி நட்ட நாம் உயிரினப் பெருக்கம் பராமரித்து மழைபெற பாளைவிடும்போது சில்வர் நைட்ரேட் வெளிவிடும் அற்புத மரமான பனையை மறந்தது தவறே. இதன் பலன் தான் மண் அரிப்பும், காற்றினால் மண்வள பாதிப்பும்.
ஏன் இந்த இடம் இப்படி புழுதியாக உள்ளது? ஏன் இந்த இடம் இத்தனை மணற்சாரியாக உள்ளது? ஏன் இந்த இடம் கரடுமுரடாக உள்ளது? என்று எத்தனை இடங்களில் எதுவுமே வராது எனத் தவறாக முடிவெடுத்தவர்கள், அங்கு நட உகந்த பனையின் மாண்பை முற்றிலும் அறியாதவர்கள்.
ஒரு பனைமரம் உள்ள இடத்தில் தான் பலவித உயிரினங்கள் வாழமுடிகிறது. ஆம் எறும்பு, ஓணான், பல்லி, பாம்பு, ஈ, கொசு, அணில்கள், எலிகள், பருந்து, வானம்பாடி, தூக்கணாங்குருவி, பச்சைகிளி, மைனா, மயில்கள், ஆந்தைகள், வௌவால்கள், உடும்பு, மர நரி, மர நாய்கள் பல்வகை விதமாக வாழ்க்கை நடத்தும் அற்புத புகலிடம் தான் பனைமரம் விவசாயிக்கு தொண்டு புரியும் சேகவகனாகவும், ஒரு பனைமரம் 10,000 லிட்டர் நீரையும் சேமிக்கும். இன்றே செல்வோம், எங்கிருந்தாலும் பனையை நம் நிலத்தில், பயிர் திட்டத்தில் சேர்ப்போம். சமுதாயத்தைக் காப்போம்.
டாக்டர் பா.இளங்கோவன்