புது தில்லி, மே 12
பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
பதஞ்சலி ஆயுர்வேத், ருச்சி சோயா, பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் ஆகிய அனைத்து நிறுவனங்களும் பாபா ராம்தேவ் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் ருச்சி சோயா மற்றும் பதஞ்சலி ஆகியவை தனித்தனி நிறுவனமாகவே இயங்கி வருகிறது.
இதன் வாயிலாகவே தற்போது ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், சுமார் ரூ.60.20 கோடிக்கு பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைப் பிஸ்னஸ் டிரான்ஸ்பர் ஒப்பந்தத்தின் கீழ் வாங்க உள்ளதாகவும், இதற்கு நிர்வாகத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தகப் பரிமாற்றத்தை அடுத்த 2 மாதத்திற்குள் செய்யவும், குறிப்பிட்டு உள்ள ரூ.600.2 கோடி தொகையை இரண்டு கட்டமாகச் செலுத்தவும் திட்டமிட்டு உள்ளது ருச்சி சோயா. முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வர்த்தகம் மாற்றம் துவங்கிய நாளில் ரூ.15 கோடியும், மீதமுள்ள தொகையை அடுத்த 90 நாட்களுக்குள் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பிஸ்னஸ் டிரான்ஸ்பர் ஒப்பந்தத்தின் மூலம் பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட்-ன் அனைத்துச் சொத்துக்கள், ஊழியர்கள், உரிமங்கள், சப்ளையர்கள் உடனான ஒப்பந்தம் அனைத்தும் அப்படியே கைமாற உள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் ருச்சி சோயா-வின் வர்த்தகம் விரிவாக்கம் அடையும்.