August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பப்பாளியில் இலைச்சுருள் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்ஸிகோ. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத் தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது. பப்பாளியில் ஏற்படும் இலைச்சுருள் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி
இந்நோயயானது புகையிலை இலைச்சுருள் நச்சுயிரினால் தோன்றுகிறது.

நோயின் அறிகுறிகள்
தாக்கப்பட்ட மரங்களின் இலைகளில் கடுமையான சுருள்களும், நெளிவுகளும் காணப்படுவதோடு, இலைகள் உருக்குலைந்தும், சிறுத்தும் காணப்படும். இலைகளில் நரம்பு வெளுத்தல் அறிகுறிகளும் தென்படும். இளைப்பாகம் தோல் போன்று கடினமாகவும், எளிதில் உடைந்துவிடக் கூடியவைகளாகவும் மாறிவிடும். நரம்புகளுக்கு இடையிலுள்ள பகுதிகளிலுள்ள திசுக்கள் அசாதரணமாக பெருக்கமடைவதாலும், விரிவடைவதாலும் அப்பகுதிகள் மேலெழும்பிக் காணப்படும். இலைகளின் விளிம்புகள் கீழ் நோக்கியும், உள் நோக்கியும் வளைந்தும், நரம்புகள் தடித்தும் தென்படும். சில வேளைகளில் எல்லா இலைகளிலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றும். இலைக்காம்புகளும் நெளிந்தும், திரிந்தும் காணப்படும். தாக்கப்பட்ட மரங்களில் பூக்களும், காய்களும் தோன்றுவதில்லை. நோய் முற்றிய நிலையில் இலைகள் உதிர்ந்து மரங்களின் வளர்ச்சியும் தடைப்பட்டு விடும்.

நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
பெமீசியா டபாசி என்னும் வெள்ளை ஈக்களால் இந்நோய்ப் பரப்பப்படுகிறது. பப்பாளியைத் தவிர இந்த நச்சுயிரி புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களையும் தாக்கக் கூடியது.

நோய்க் கட்டுப்பாடு உழவியல் முறைகள் :

நோய்த் தாக்கிய மரங்கள் குனமடைவதில்லை. அவற்றிலிருந்து காய்களும் பெரும்பாலும் தோன்றுவதில்லை. ஆகவே நோய்த் தாக்கிய மரங்களை உடனடியாக, வேரோடு பிடுங்கி எரித்து விட வேண்டும். பயிரிடப்படும் எல்லா பப்பாளி இரகங்களையும் இந்நோய்த் தாக்கக் கூடியது.

மருந்து சிகிச்சை :
வெள்ளை ஈக்கள் தாக்காதவாறு பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகித்து, நோய் தோன்றாமல் மரங்களைப் பாதுகாக்க வேண்டும்.

கட்டுரையாளர்கள் : கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொடர்பு எண் : 82488 33079, மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com, இரா.அருண்குமார், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், வேளாண் விரிவாக்கத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
தொடர்பு எண்: 73052 81993, மின்னஞ்சல் : arunkumarr698@gmail.com, முனைவர் த.சுதின் ராஜ், உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, தொடர்பு எண்: 94420 29913. மின்னஞ்சல் : suthinagri@gmail.com, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் –608 002.

Spread the love