August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயணிகள் வாகன விற்பனை 10 சதம் வீழ்ச்சி

புது தில்லி, மே 13

கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிட் தாக்கத்தின் விளைவாக பயணிகள் வாகன விற்பனை 10 சதம் சரிவடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020ம் ஆண்டு தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை எதுவும் நடைபெறவில்லை. அதன் காரணமாகவே, ஏப்ரல் மாத விற்பனை முந்தைய மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பீடு செய்ப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகள் வாகன விற்பனை இந்த காலகட்டத்தில் 10.07 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், இந்த புள்ளி ளிவிவரங்களின்படி, இருசக்கர வாகன விற்பனை நடப்பாண்டு ஏப்ரலில் 9,95,097-ஆக இருந்தது. இது, முந்தைய மார்ச் மாத விற்பனையான 14,96,806 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 33 சதம் சரிவாகும். இந்த காலகட்டத்தில், மோட்டார் சைக்கிள் விற்பனையும் 9,93,996 என்ற எண்ணிக்கையிலிருந்து 33 சதம் குறைந்து 6,67,841-ஆனது.

அதேபோன்று, ஸ்கூட்டர் விற்பனையும் 4,57,677-லிருந்து 34 சதம் சரிவடைந்து 3,00,462-ஆனது. மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் ஏப்ரல் மாதத்தில் 57 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை 31,930 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,728-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கோவிட் இரண்டாவது அலை வாகன தேவையில் மோசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன், இது நுகர்வோர் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விநியோக மையங்களின் நீண்ட கால முடக்கத்துக்கும் காரணமாகியுள்ளது என்றார் அவர்.

Spread the love