வாஷிங்டன், ஏப்.26
இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா-இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவை தற்போது அதிக கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவிற்கு விமானம் மூலம் பயணிக்க வேண்டாம் என்று ஜோ பைடன் அரசு அறிவுறுத்தி வருகிறது. சாதாரணமாக தில்லியிலிருந்து வா´ங்டன் செல்லும் அமெரிக்க விமானத்தின் கட்டணம் 50 ஆயிரம்.
ஆனால், தற்போது சர்வதேச விமானங்கள் எண்ணிக்கையில் குறைக்கப்படுகின்றன. மேலும் விமானத்தில் பயணிக்க கூட்டம் அலை மோதுவதால் தற்போது விமான கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த பயண கட்டணம் தற்போது தனியார் செயலிகளில் ஒன்றரை லட்சம் வரை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதன் காரணமாக அடிக்கடி இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் தொழிலதிபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயணக் கட்டுப்பாடு குறித்து பரிசீலித்த ஜோ பைடன் அரசு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளை நான்காம் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையின் விதிப்படி அமெரிக்கர்கள் அமெரிக்காவிலிருந்து இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரத் தற்போது தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.