தர்மபுரி, ஜூன் 29
தர்மபுரி மாவட்டத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டியில் “பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை” பற்றிய விவசாயிகளுக்கான ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சி 28.6.2022 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் முனைவர் மா.அ.வெண்ணிலா, தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். முனைவர் மா.தெய்வமணி, பயறு வகை பயிர்களில் ஏற்படக்கூடிய பச்சைக் காய் துளைப்பான், புள்ளி காய்ப்புழு காய் நாவாய்ப்பூச்சி, புகையிலை புழு, வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன் போன்ற பூச்சிகளின் சேத அறிகுறிகளையும் அதன் கட்டுப்பாட்டு முறைகளையும் மற்றும் பயிர்களில் ஏற்படக் கூடிய நோய்களான வேர் அழுகல், துவரையில் மலட்டுத் தேமல், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், சாம்பல் நோய், மஞ்சள் தேமல் நோய், இலை சுருக்கம் நோய் பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் விளக்கினார். மேலும் பயறு வகைப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க தரமான உயர் இரகங்களின் விதைகளை பயன்படுத்த வேண்டியும், பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றியும், பயிர் சுழற்சி மற்றும் அதிக மகசூல் தரும் இரகங்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். முனைவர் வீ.வீரணன் அருணகிரிதாரி, பயிறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் பற்றி விளக்கினார்.