June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகைப் பயிர்கள் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள்

சிவகங்கை, ஜூன் 8

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வடடாரத்தில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகம் உள்ளார்கள். வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, பாரம்பரிய முறையில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் முறைறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். தொழில்நுட்பம் என்பது நமது முன்னோர்களின் அனுபவ அறிவின் மூலம், சிறந்த தொழில் நுட்பமாக கருதப்பட்டவை, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருபவையாகும். இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் அங்கக வேளாண்மையில் முக்கிய தொழில்நுட்பங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

விதை நேர்த்திக்கான பாரம்பரிய தொழில்நுட்பம்
· மாட்டுக் கோமியம் கொண்டு விதை மூலாம் பூசுதல்
· நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றிட வசம்புத்தூள் மூலாம் பூசுதல்
· கடினமான விதைகளை தண்ணீரில் ஊறவைத்து விதைத்தல்
· விதைகளைப் புளித்த மோரில் நனைத்து விதைத்தல்
· மைதா அரப்பு கூழில் பூசி விதைத்தல்
· சாணக் கரைசலில் ஊறவைத்து விதைத்தல்
· பீஜாமிர்தக் கரைசலில் ஊறவைத்து விதைத்தல்

மண் மற்றும் நீர் மேலாண்மையில் கடைபிடிக்கப்படும் பாரம்பரியத் தொழில்நுட்பங்கள்
ஊடுபயிர், மூடுபயிர், கலப்புப்பயிர், குறுக்குச்சால் உழவு, குறுக்கு- நெடுக்கு உழவு, ஆழ உழவு, கோடை உழவு, தொடர் உழவு, கல் வரப்பு போன்ற மண்வள மேலாண்மைக்கான பாரம்பரியத் தொழில் நுட்பங்களும், மண்ணினை பண்படுத்தும் தொழில் நுட்பங்களான வண்டல் மண் மற்றும் பயிர்க் கழிவுகளை வயல்களில் இடுதல் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. வடிகால் நீரினை அறுவடை செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மழைநீரைக் கொண்டு கிணற்றினை நிரப்புதல் போன்றவை நீர் மேலாண்மை பாரம்பரியத் தொழில் நுட்பங்களாகும்.

பாரம்பரிய பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
பஞ்சகவ்யம், பீஜாமிர்தம், புகைமூட்டம் போன்றவை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வளர்ச்சி ஊக்கிகளாகும்.

பாரம்பரிய களைக் கட்டுப்பாட்டு முறைகள்
· அரிவாள், களைக்கொத்தி, கலப்பை போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துதல்
· பயிர்சுழற்சி, மூடுபயிர், கலப்புப் பயிர் போன்ற பயிர் வேளாண்மை யுக்திகளைக் கடைபிடித்தல்
· பயிர் விதைகளை சீராக தூவுதல், எரித்தல், கல் உப்புக் கரைசல் தெளித்தல், போன்றைவை பூச்சி மேலாண்மைக்கான பாரம்பரிய தொழில் நுட்பங்கள்.
தாவர பூச்சிக் கொல்லிகளான நொச்சி இலைச்சாறு (5 சதவிகிதம்), கற்றாலை இலைச்சாறு (5 சதவிகிதம்), காட்டாமணக்கு இலைச்சாறு (5 சதவிகிதம்), சீத்தா இலை + ஆடுதின்னாப்பாளை இலைச்சாறு (3 சதவிகிதம்), சோற்றுக் கற்றாலைச்சாறு + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் (2.5 சதவிகிதம்), எருக்கு இலைச்சாறு + பூண்டு + வெங்காயம் + மிளகாய்தூள் (3 சதவிகிதம்), அரளி இலைச்சாறு (5 சதவிகிதம்), மாட்டுச்சாணம் (5 கிலோ) + கோமியம் (5 லிட்டர்) + சுண்ணாம்பு (200 கிராம்) கலந்தக் கரைசல் போன்றவை பயறுவகைப் பயிர்களில் தோன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திட நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பரியத் தொழில் நுட்பங்களாகும்.

சேமிப்பின் போது பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்திடும் பாரம்பரியத் தொழில் நுட்பங்கள்
நொச்சி இலைத்தூள் (5 சதவிகிதம்), நொச்சி + வேம்பு இலைத்தூள் (2.5 சதவிகிதம்), மஞ்சள் தூள் (5 சதவிகிதம்), யூக்கலிப்டஸ் இலைத்தூள் + மரத்தூள் ( 5 சதவிகிதம்), வசம்புத்தூள் ( 3 சதவிகிதம்), சீத்தாவிதைத்தூள் (5 சதவிகிதம்) போன்றவற்றை விதைகளுடன் கலந்தும், தாவர எண்ணெய் (வேம்பு , புங்கம், ஆமணக்கு, தேங்காய்) மற்றும் செம்மண் பயன்படுத்தி விதை முலாம் பூசியும் சேமிப்பில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தி வந்துள்ளனர்.

பாரம்பரிய நோய் தடுப்பு முறைகள்
· மேல் சாம்பல் நோய்க்கு தயிர் மற்றும் பெருங்காயம் கரைசல் தெளித்தல்.
· வேர் அழுகல் நோய்க்கு வெங்காயம் சாணக் கரைசல் தெளித்தல்
· மேட்டுப்பாத்தி, பயிர்ச் சுழற்சி போன்றவை தாவர நோய் மேலாண்மைக்கான சில பாரம்பரிய தொழில் நுட்பங்களாகும்.

பொதுவாக பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் விலை மலிவானவை. சுற்றுச் சூழலுக்கு கெடுதல் விளைவிக்காதவை. மிகவும் எளிதில் கிடைக்கப்பெறும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பாரம்பரிய தொழில் நுட்பங்களை இன்றைய நவீன வேளாண் தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தி பயறுவகைப் பயிர்களில் நிறைவான விளைச்சலைப் பெற்றிடலாம் என்பது பற்றி அட்மா திட்ட அலுவலர்களான வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் க.கோபாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்து கூறினார்கள்.

Spread the love