சிவகங்கை, ஏப்.6
சிவகங்கை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி பயறு வகை பயிரிட்டு மண் வளம் காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல் சாகுபடியினை தொடர்ந்து பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூலும், அதிக வருமானமும் பெறுவதோடு மண் வளமும் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது. மண்ணிலுள்ள 16 வகையான சத்துகள் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் முதன்மையான கரிமச்சத்தினை தொழுஉரம் இட்டு மண்வளம் காக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் முதல்நிலை சத்துக்களாகும். இவைகள் முறையே யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், மூரேட் ஆப் பொட்டாஸ் ஆகிய உரங்கள் இடுவதால் இவைகளின் பற்றாக்குறை சரி செய்யப்படுகிறது. இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியவை பேரூட்டச் சத்துக்களாகும். நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, ஜிங்க், மாங்கனீசு, காப்பர், போரான், குளோரின், மாலிப்டினம் ஆகியன மிகவும் குறைவான அளவுகளில் தேவைப்படுபவை. இருப்பினும் பயிரின் வளர்ச்சி, பூச்சி நோய் எதிர்ப்புதிறன், அதிக மகசூல் போன்ற காரணிகளுக்கு அடிப்படையான சத்துக்களாகும். கலப்பு உரங்கள், ஜிப்சம் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இடுவதன் மூலம் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாட்டினை சரிசெய்யலாம்.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்சமயம் அறுவடை நிலையில் உள்ள நெல்லினை அறுவடை செய்யும் முன் அல்லது அறுவடையின் போதே கூட பயறுவகை பயிர்களை விதைக்கலாம். இதன் மூலம் பாசன நீரின் தேவை குறைவதோடு நெல் சாகுபடிக்கென இடப்பட்ட உரங்களை பயன்படுத்தி பயறுவகை பயிர்களான தட்டைபயறு, பாசிபயறு மற்றும் உளுந்து ஆகியன நன்கு வளரும். பயறுவகை பயிர்களின் வேர்முடிச்சுகளில் உள்ள பாக்டீரியங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தினை ஈர்த்து மண்ணில் நிலை நிறுத்;தும் தன்மையுடையவை. ஆகவே பயிர் வளர்ச்சியின் போதே மண்ணில் நைட்ரஜன் சத்தினை மண்ணில் நிலைநிறுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு பயிருக்கு இடவேண்டிய உரச்செலவு குறைக்கப்படுகிறது. மேலும் களை எடுக்கும் பணி மற்றம் உழவுப்பணி செய்ய வேண்டிய செலவு மற்றும் நேரம் மிச்சப்படும்.
பயறுவகை பயிர்களுக்கு பூக்கும் தருணத்தில் 2 சத டிஏபி கரைசல் தெளிப்பதன் மூலம் திரட்சியான, அதிக எண்ணிக்கையிலான காய்பிடிப்பும் இருக்கும். அதற்கு 4கிலோ டிஏபியினை 20 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். மறுநாள் வடிகட்டி, வடிநீரினை 180 லிட்டருக்கு கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும் பயறு நுண்ணூட்டத்தினை ஏக்கருக்கு 5கிலோ வீதம் இடுவதால் சீரான வளர்ச்சி, அதிகமான பூக்கும் திறன், மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது.