சிவகங்கை, ஜூலை 12
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், தொழில்நுட்பங்கள் பற்றி பின்வருமாறு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பெரும்பாலான பயிர்கள் வளர்வதற்கு தேவையான சத்துக்களை நாம் மண்ணின் வழியாக வழங்குகிறோம். ஆனால் இலைவழி தெளிப்பாக சத்துக்களை வழங்கும் போது பயிர்கள் அவற்றை முழுமையாகவும், அதே சமயம் விரைவாகவும் எடுத்துக் கொள்கின்றன. இலைவழி தெளிப்பின் மூலம் நாம் சத்துக்களை பயிர்களுக்கு வழங்கும் போது அதன் உபயோகத்திறன் அதிகரிப்பதுடன், உரத் தேவையும் குறைவதால் சாகுபடி செலவும் குறைகிறது. பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் தருணத்தில் பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழியாக தெளிக்கும் போது அவை முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதுடன் அதிகளவு பூக்கள், காய்கள், கதிர்கள் உருவாக உதவுகிறது.
பயறு வகை பயிர்களில் இலை வழி ஊட்டங்கள் வழங்கும் முறை
v பயறு வகை பயிர்களில் மகசூலை அதிகரிக்க 1 சதம் யூரியா கரைசலை விதைத்த 30 மற்றும் 45-வது நாளில் தெளிக்க வேண்டும்.
v நெல் தரிசு பயிர்களுக்கு 2 சதம் டி.ஏ.பி கரைசலை தெளிக்க வேண்டும்.
v இடைக்கால வறட்சியினை நிவர்த்தி செய்ய 2 சதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம் போரான் கலந்து தெளிப்பதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாங்கி வளர்வதுடன் மகசூலையும் அதிகரிக்க உதவுகிறது.
v 1 லிட்டர் தண்ணீருக்கு என்.ஏ.ஏ. 40 மி.கி மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மி.கி கலந்து பூ பூப்பதற்கு முன்பும் மற்றும் 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
இலை வழி ஊட்டம் தெளிக்கும் திறனை அதிகரிக்க
Ø பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயன்படுத்த வேண்டும்.
Ø அதிக வெயில், மழை மற்றும் காற்று வீசும் காலங்களில் இலை வழி தெளிப்பினை தவிர்க்க வேண்டும்.
Ø தேவை ஏற்படின் எலுமிச்சம் பழச்சாறு கொண்டு கலவையினை கார அமிலத் தன்மையை சமன் செய்ய வேண்டும்.
Ø ஊட்டச்சத்துக்கள் கலந்த நீரினை நன்கு வடிகட்டி பின்னர் தெளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
Ø தேவை ஏற்படின் அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறை நிவர்த்தியாகாத பட்சத்தில் மீண்டும் ஒருமுறை தெளிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
Ø தேவைக்கு ஏற்ப அவ்வப்பொழுது ஊட்டச்சத்து கரைசல் தயார் செய்து தெளிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
Ø தேவைக்கு ஏற்ப ஒட்டும் திரவம் (1 லிட்டர் கரைசலுக்கு 1 மில்லி வீதம்) கலந்து தெளிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இலை வழி ஊட்டம் தெளிப்பில் கவனிக்க வேண்டியவை
இலைவழி தெளிப்பின் போது கரைசலுக்கு தேர்வு செய்யப்படும் தண்ணீரின் தரம் மிகவும் முக்கியமானதாகும். நீரின் கடினத்தன்மை அதிகமாக இருந்தால் அவை பயிர்களின் மீது தெளிக்கப்படும் போது இலைக் கருகல் போன்ற தீங்கினை விளைவிக்கக் கூடும். எனவே, நீரின் கடினத்தன்மையை போக்க தேவையான எலுமிச்சம் பழச் சாறு கலந்து தெளிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இலை வழி தெளிப்பின் நன்மைகள்
Ø மண்ணில் இடப்படும் உரங்களை விட குறைந்த அளவு உரங்கள் இருந்தாலே போதுமானதாகும்.
Ø பயிர்களுக்கு சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து கிடைத்திட வழிவகை செய்கிறது.
Ø பயிர்கள் உடனடியாக சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன், ஊட்டச்சத்து பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யப்படுகிறது.
Ø பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையினை பெறுகின்றன.
Ø திரட்சியான மற்றும் முழுவதும் நிரம்ப பெற்ற காய்கள் பெற உதவுகின்றன.