விழுப்புரம், ஜூன் 22
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயறு வகை மற்றும் எண்ணைய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. விக்கிரவாண்டி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கொட்டியாம்பூண்டி கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி, தலைமை தாங்கி பயறு வகை பயிர்களில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் நன்மைகள் குறித்தும், உளுந்து பயிர்களில் வம்பன் – 8 இரகம் முக்கியத்துவம் குறித்தும், மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஸ்ரீதர், திருந்திய பயறு சாகுபடி குறித்தும், ரகம் தேர்வு தரமான விதை உற்பத்தி செய்வது குறித்தும், எண்ணைய் வித்து பயிர்களில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மற்றும் நெல் சாகுபடியில் அதிகளவில் சன்ன இரகங்கங்களைச் சாகுபடி செய்ய எடுத்துரைத்தார்;. கரும்பு பயிர்களில் புதியதாக காணப்படும் “பொக்கோ போயிங்” நோயின் தாக்குதல் மற்றும் தீர்வு கானும் வழிமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் டாக்டர் இரா.மாதவன், வரவேற்று விவசாயிகளுக்கு உளுந்து பயிர்களில் பருவம், நிலம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்வது குறித்தும் உளுந்து பயிர்களில் அதிக மகசூல் பெற பூ பூக்கும் பருவத்தில் 2 சதவித டி ஏ பி கரைசல் தெளிக்க வேண்டும் மற்றும் அசோஸ்பைரில்லம் ரைசோபியம், பாஸ்போபாக்டிரியா, டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிர் உரங்கள் பயன்கள் குறித்தும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.