June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயிர்களுக்கு பயன் தரும் நுண்ணுயிர் உரங்கள்

கோவை, மே 31

உயிர் உரங்கள் தழைச்சத்தை கிரகித்து வேர்முடிச்சில் பொருத்தியும், மணிச்சத்தைக் கரைத்தும் இயற்கை முறைகள் மூலம் பயிகளுக்கு கொடுக்கிறது. இரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைக்குமென்பது உறுதி. உயிர் உரங்களிலுள்ள நுண்ணுயிர்கள் மண் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டு மற்றும் மண் கரிமபொருட்களை அதிகரிக்கும். தழைச்சத்தினை நிலைநிறுத்தும் திறன் கொண்ட ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசிடொபெட்டர், அசோலாவும், பேசில்லஸ், சூமோமோனாஸ், மணிச்சத்தை கரைத்தும் கொடுக்கும் தன்மை நுண்ணுயிர்களுக்கு உண்டு. பூஞ்சாண வகையான வேம் இவை பயிரின் வேரின் உட்பூசணமாக இருந்துகொண்டு வேர் புகமுடியாத இடத்திற்க்குச் சென்று மணிச்சத்தினை கரைத்து வேர்கலுக்கு கரைத்து கொடுக்கின்றது.

ஒருங்கிணைந்த முறையில் பயிர் உற்பத்திக்கு நுண் உயிர்கள் உரங்கள் பயன்படுவதுடன் மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழ்லை பாதுகாக்கிறது. நுண் உயிர்கள் பயன்படுத்துவதால் 30% தழைச்சத்தும், 20% மணிச்சத்தும் கிடைப்பதால், இடுபொருட்களின் செலவும் கனிசமாக குறைகிறது. மேலும் சில நுண் உயிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான இன்டோல்அசிடிக் அமிலம், ஜிப்ரலிக் அமிலம், கரிம அமிலம், ஃபொர்மலிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிரின் இலைகள், தூர், வேரின் வளர்ச்சிக்கும் அதிகரிக்கிறது.

ரைசோபியம் : இந்த வகை பாக்டீரியா பயறு வகை, நிலக்கடலை (மணிலா) பயிகளுக்கு கொடுப்பதுடன் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர்முடிச்சில் தக்கவைத்து 20% மகசூலை அதிகரிப்பதுடன் முடிச்சுகளில் சுரக்கும் திரம் மண்ணை வளப்படுத்துகிறது.

அசோஸ்பைரில்லம் : மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலைநிறுத்தி ‘இணைகூட்டு வாழ்’ முறையில் நெற்பயிரின் வேர் மற்றும் வேர் சூழ் மண்டலத்தில் செயல்படுகிறது. பயிரோடு சேர்ந்து தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை கொண்டது. நெற்பயிர் ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யும் மாவுச்சத்தினை அசோஸ்பைரில்லம் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகக் காற்றிலுள்ள தழைச்சத்தினைப் பிடித்து நெற்பயிருக்குக் கொடுக்கிறது. இதைத் தவிர பயிரின் வேர் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிப்பதுடன் வறட்சியைத் தாங்கும் திறனையும் கொடுக்கிறது. நெல், சோளம், கம்பு, வாழை, காய்கறி பயிகளுக்கும் 25% மகசூலை அதிகரிகிறது.

பாஸ்போபாக்டீரியா : தாவரங்களின் திசுக்கள், வேர்கள் செழித்து வளரவும் பயிர்களின் இனப்பெருக்கத்திற்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தினை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாதது. பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரானது பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தினை, அங்கக அமில திரவங்களை சுரந்து அவற்றில் கரைய வைத்து பயிருக்கு எளிதாக கிடைக்கும் நிலைக்கு மாற்றுகின்றது. பாஸ்போ பாக்டீரியா இடுவதன் மூலம், மலர்களின் எண்ணிக்கையும், விதை பெருக்கத்தையும் அதிகரிக்கின்றது. அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற தழைச்சத்து அளிக்க கூடிய உயிர் உரங்களுடன் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து இடும்போது தழைச்சத்தினை அதிக அளவில் ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன.

வேம் : பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள், தென்னை, மலைத் தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். வேர் உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும் வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக் கொடுக்கிறது. மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை : ஒரு எக்டருக்கு பரிந்துரைப்பட்ட நுண்ணுயிர் உரங்களை நன்கு மக்கிய தொழு உரமுடனும், விதைகளை ஆறிய அரிசி கஞ்சியுடம் கலந்தும் இடலாம்.

நுண்ணுயிர் உரங்களுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிருக்கு ரைசோபியம், பாஸ்போபாக்டீரியாவும், ஊட்ட சத்துமிக்க சிறுதானிய பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவும் 50 சதவிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகலாம். இவ்வாறு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட இயக்குநர் இரா.சித்ராதேவி மற்றும் திட்ட மேலாண்மைக் குழுவினர் தெரிவித்தனர்.

Spread the love