August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயோ ஸ்டிமுலண்ட்ஸ் (Bio Stimulants) உற்பத்தி/விற்பனை செய்யும் நிறுவனங்கள் தற்காலிக சான்று பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை, மே 17

க்யூமிக் அமிலம், பல்விக் அமிலம், கடற்பாசி சாறு போன்ற பயோ ஸ்டிமுலண்ட்ஸ் (Bio Stimulants) உற்பத்தி/விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவசியம் சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இரசாயன பயன்பாடு இல்லாத, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு தங்கள் வருவாயினை பெருக்கிக்கொள்வதோடு சுற்றுப்புற சூழலை பாதுகாத்து, நுகர்வோர்கள் அனைவருக்கும் நஞ்சில்லா உணவு கிடைத்திடும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இயற்கை விவசாயத்தில், பயிர்களின் செயல்திறனை தூண்டக்கூடிய இயற்கை முறையில் கிடைக்கும் மூல ஆதாரங்கள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்படும் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் (டீழை ளுவiஅரடயவௌ) என்ற பொருட்கள் பயிர் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. கடந்த காலங்களில் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் இல்லாத காரணத்தினால் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் தயாரிக்கும் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், விவசாயிகளின் தேவைக்கேற்ப அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு கடற்பாசி சாறு, க்யூமிக் அமிலம், பல்விக் அமிலம், அமினோ அமிலம் போன்ற பொருட்களை கொண்டு கலவைகளாகவோ தனியாகவோ தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது விவசாயிகளுக்கு தரமான பயோ ஸ்டிமுலண்ட்ஸ் வழங்கும் பொருட்டு 23.02.2021ல் மத்திய அரசு உரக்கட்டுப்பாடுச் சட்டம் 1985ஐ திருத்தியமைத்து வெளியிடப்பட்ட அரசிதழ் குறிப்பின்படி பயோ ஸ்டிமுலண்ட்ஸ் அனைத்தும் உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985ன் கீழ் வகைப்படுத்தப்பட்டு, பயோ ஸ்டிமுலண்ட்ஸ் உற்பத்திக்கு உரிமம் பெறுவது, விற்பனை செய்வது, அதில் கலந்துள்ள பொருட்கள் குறித்து, தரத்தினை உறுதி செய்திட மாதிரி எடுப்பது போன்று பல தெளிவான விளக்கங்களுடன் ஆணை பெறப்பட்டுள்ளது. பயோ ஸ்டிமுலண்ட்ஸ் தயாரிப்பாளர்கள் தற்காலிக சான்று பெறுவதற்கு படிவம் G-1 ல் கீழ்காணும் விபரங்களுடன் உரக் கட்டுப்பாட்டாளர், நியூடெல்லி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  1. தயாரிப்பு விபரங்கள், லேபிள், இதர விபரங்கள் மற்றும்
  2. படிவம் G-2 ல் மாநில அரசு வழங்கிய சான்றிதழ்.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 22.08.2021 ஆகும்.

ஆகவே, பயோ ஸ்டிமுலண்ட்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் அனைவரும் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்/வேளாண்மை அலுவலர்/உர ஆய்வாளர்கள் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அவர்களை தொடர்பு கொண்டு தற்காலிக சான்று பெறுவது மற்றும் விற்பனை செய்வது குறித்த தகவல்களை அறிந்து கொண்டு உரிய காலத்திற்குள் சட்டப்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Spread the love