June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தியில் வாடல் நோய் மற்றும் சாம்பல் நோய் கட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம், வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, விவசாயிகளுக்கு பருத்தியில் வாடல்நோய் மற்றும் சாம்பல் நோய் தாக்குதல் அறிகுறிகள் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து பெய்து வரும் மழை மேகமூட்டமான மற்றும் அதிக ஈரப்பதமான சூழ்நிலை ஆகியவை பருத்தி பயிரின் உற்பத்தித் திறனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான நோய் காரணிகள், வெர்ட்டிசீலியம் வாடல் நோய் மற்றும் சாம்பல் நோய்.

வெர்ட்டிசிலியம் வாடல் நோய் : வெர்ட்டிசிலியம் டாலியே (Verticillium dahlia)
அறிகுறிகள்
Ø பொதுவாக, பயிர் பூத்துக் காய் பிடிக்கும் தருணத்தில் மிகுதியாக தோன்றும்.
Ø இலை நரம்புகளின் இடைப்பட்ட பகுதி வெளுத்து மஞ்சளாக காணப்படும். இலைப் பாகத்தில் வெளி ஒரப்பகுதிகளும் காய்ந்துவிடும்.
Ø நரம்புகளின் ஒரங்களில் மட்டும் பசுமை நிறமும் மற்ற பகுதிகளில் காய்ந்த பழுப்பு நிறமும் கொண்ட குவிந்த தோற்றம் “புலியின் கால்தட வரி” போன்று காணப்படும்.
Ø செடியின் மேல் பட்டையை நீக்கி (அ) பிளந்து பார்த்தால் இளஞ்சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்.

நோய் பரவ சாதகமான சூழ்நிலை
Ø குறைந்த வெப்பநிலை, 15-200C
Ø தாழ்வான மற்றும் நீர் வடியாத பகுதிகள்
Ø அதிக களி மற்றும் காரத்தன்மையுள்ள மண் வகைகள்
Ø அதிக அளவு தழைச்சத்து உரமிடுதல்

கட்டுப்படுத்தும் முறைகள்
Ø நெல் (அ) குதிரைமசால் (அ) செவ்வந்திபூ கொண்டு 2-3 வருடங்களுக்கு பயிர் சுழற்சி செய்யவும்.
Ø அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம்  / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
Ø ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த நோய் தாக்கப்பட்ட தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்.
Ø பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
Ø தொழுவுரம் 10 டன் / எக்டர் இடவும்.
Ø 0.1 % கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.
Ø நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களான சுவின், சுஜாதா ரகங்களையும் தாங்கு சக்தி கொண்ட ரகமான MCU 5 ரகங்களையும் பயிரிடலாம்.

சாம்பல் (அ) தயிர்ப்புள்ளி நோய் : ராமுல்லேரியா ஏரியோலா (Ramularia)
அறிகுறிகள்
Ø இலையின் அடிப்புறத்தில், ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
Ø நோய் தீவிரமடைந்த நிலையில் சாம்பல் நிற நுண்துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.
Ø பாதிக்கப்பட்ட இலைகள் நுணியிலிருந்து உள்நோக்கி காயத்தொடங்கும்; பின் மஞ்சள் நிறமாகி, இளம் இலைகள் உதிர்ந்துவிடும்.
Ø நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் சுஜாதா மற்றும் வரலட்சுமி  போன்றவைகளை பயன்படுத்தவும்

நோய் பரவ சாதகமான சூழ்நிலை
Ø வடகிழக்கு பருவ மழை காலத்தில் விட்டுவிட்டு மழை பெய்தல்.
Ø குறைவான வெப்பநிலை 20-300C அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை
Ø நெருக்கமான பயிர் பண்ணிக்கை
Ø அதிக அளவு தழைச்சத்து இடுதல்
Ø முன்கூட்டிய விதைப்பு அல்லது மிகவும் பின்தங்கிய விதைப்பு.

மேலாண்மை
Ø நோய் தாக்கப்பட்ட தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும்
Ø தானாக வளர்கின்ற பருத்தி செடிகளை அகற்றவும்
Ø அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும்.
Ø மண்ணின் சத்து நிலை மற்றும் தாவர வகைகளைப் பொருத்து வயலில் இடைவெளியை சரிசெய்யவும்.

Ø கார்பென்டசிம் 250 கிராம் (அ) வெட்டாபிள் சல்பர் 1.25 – 2.0 கிலோ / எக்டர், வாரத்திற்கு ஒருமுறை தெளிக்கவும்.

Spread the love