January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தி ஆராய்சி நிலையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

திருப்பூர், டிச.24

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் வட்டாரம், பொன்னேரி கிராமத்தில் சைமா பருத்தி ஆராய்ச்சி நிலையம் 1974ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு 47 வருடங்களாக பருத்தி உற்பத்தி மட்டும் ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் வரை விதைப்பண்ணைகள் அமைத்து 4000 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்து வருகின்றனர். இதிலிருந்து 150 மெ.டன் சான்று பெற்ற விதைகளையும், 1300 குவிண்டால் பஞ்சும் உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 2000மாவது ஆண்டுக்கு முன்பு வரை பருத்தி சாகுபடி பரப்பு 1,40,000 ஹெக்டராக இருந்தது, தற்பொழுது 70,000 ஹெக்டராக குறைந்துள்ளது. இதனால் பஞ்சு சார்ந்த தொழிற்சாலைகள், நூற்பாலைகளுக்கேற்ப பருத்தி உற்பத்தி இல்லாமல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பருத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான பருத்தியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளோம். பொதுவாக நீண்ட இழை பருத்தி உற்பத்தி செய்யக்கூடிய பருத்தி இரகங்கள் 210 நாட்கள் வாழ்நாள் உள்ளதால் விவசாயிகள் இவ்வித இரகங்களை உற்பத்தி செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே, குறைந்த வாழ்நாள் உடைய நீண்ட இழை பருத்தி இரகங்கள் உற்பத்தி, அரவை சதவீதம் அதிகமாக உள்ள இரகங்கள் காய் புழுவிற்கு எதிர்ப்பு திறன் தரக்கூடிய இரகங்கள் அதிக உற்பத்தி தரக்கூடிய இரகங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு விவசாயிகளுக்கு பயனுள்ள இரகங்களை வெளியிட்டு பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். சைமா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பருத்தி இரகங்களான சைமா பிளாட்டினம், சைமா 5, மற்றும் நீண்ட இழை பருத்தி இரகங்களான சுவின், சுரபி இரகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்நிறுவனத்தின் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட பருத்திகளில் அரவை மற்றும் சுத்தி பணி மேற்கொள்ளப்பட்டு சான்று பெற்ற தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தார். விதைச்சான்று துறையில் பணியாற்றும் அலுவலர்கள் விதைத்தரத்தில் எவ்வித குறைபாடுமின்றி பணியாற்றி தரமான விதைகள் விவசாயிகளை சென்றடையவேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பருத்தி ஆராய்ச்சியாளர் ஆஷா, விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பி.ஆ.மாரிமுத்து மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் உடனிருந்தனர்.

Spread the love