August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தி கொள்முதலில் இடைத் தரகர்களின் கூட்டுக்கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும்

பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

திருவாரூர், ஜூன் 29

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்வதை 15 தினங்களாக வியாபாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர்
பி ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 15 தினங்களாக பருத்தி கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் என்கிற போரில் இடைதரகர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. ‘

குறிப்பாக தமிழக அரசு கோடை நெல் சாகுபடி கைவிட்டு மாற்று பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என பிரச்சாரத்தை மேற்கொண்டது. அப்படி மீறி நெல் சாகுபடி செய்தால் கொள்முதல் செய்வது தடைபடும் என்கிற மிரட்டலை அடுத்து விவசாயிகள் பெருமளவு பருத்தி சாகுபடி மேற்கொண்டார்கள். பருத்திக்கு தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் 60 ரூபாய் 80 பைசா குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வியாபாரிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கிலோ பருத்தி ரூபாய் 110 முதல் ரூபாய் 111 வரையிலும் கொள்முதல் செய்திருக்கிறாரகள். உற்பத்தி பெருகியவுடன் இடைத்தரகர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு கிலோ 1 க்கு ரூபாய் 50 முதல் 60க்குள் கொள்முதல் என்ற பேரில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓரிரு விவசாயிகளிடம் மட்டும் பெயரளவில் கொள்முதல் செய்வது போல் நாடகமாடி விட்டு வெளிச்சந்தையில் அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு உடனடியாக மாநில உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும், பருத்திக் கொள்முதலை உரிய சந்தை விலையில் கொள்முதல் செய்து உடன் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி தேவைப்படும் மாவட்டங்களில் இருக்கிற வியாபாரிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசே நேரடியாக கொள்முதலில் இடைத்தரகர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இதனால் பல இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனை காரணம் காட்டி கொள்முதல் நிறுத்தி உள்ளதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மன்னார்குடி மட்டுமின்றி காவிரி டெல்டா மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில 15 தினங்களுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான குவிண்டால் பருத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தை விவசாயிகள் இழுத்து பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் துணை செயலாளர் எம்.செந்தில் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செல்வம், ராஜேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Spread the love