மதுரை, மே 12
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகின்றது. இலைகள் சிவப்பாதல், பூ உதிர்தல் மற்றும் காய் பிடிப்புத்திறன் குறைதலினால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர். தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுவதால் செடிகள் அதிக பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இச்சமயத்தில் நுனி கிள்ளுதல் முறை மூலம் பக்ககிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய நேரத்தில் வெடிக்க உதவுகின்றது. இரகங்களுக்கு 75-80 ம் நாளில் 15 வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85-90 ம் நாளில் 20 வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிட வேண்டும். இலை சிவப்பாதலை தடுக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கழைகழகத்தின் நுண்ணுட்ட உரக்கலவையினை 10 கிலோ கிராமை ஊட்டமேற்றிய தொழுஉரமாக அளிக்கவேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காட்டன் பிளஸை ஏக்கருக்கு 2.5 கிலோ கிராமை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பூக்கும் பருவத்தில் செடி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூ உதிர்வது தடுக்கப்படும் காய் வெடித்தல் அதிகரித்து விதை பருத்தி மகசூல் அதிகரிப்பதோடு வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மையும் அளிக்கிறது. மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான முனைவர் சீ.கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் மு.இராமசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டனர்.
Spread the love