பழம்பாசி இதை நிலத்துத்தி என்றும் அழைப்பார்கள். இதய வடிவ இலைகளை உடைய, சிறு செடி. தானாக வளரக்கூடியவை. இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையது. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், தாது வெப்பு அகற்றுதல் ஆகிய குணமுடையது. இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்து களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். 20 கிராம் இலையை பொடியாக அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சூடு தணியும். இதை 20 மில்லி அளவாக குழந்தைகளுக்கு காலை, மாலை கொடுத்து வர ரத்த கழிச்சல், சீதக் கழிச்சல், ஆசனம் வெளித்தள்ளுதல் ஆகியவை தீரும். 30 கிராம் வேரை சிதைத்து 200 மில்லி நீரில் விட்டு 100 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக 3 வேளை பருகி வர சிறு நீர், பித்தம் தொடர்பான நோய்கள், காய்ச்சல், ரத்த மூலம், சொட்டு மூத்திரம், ரத்த சிறுநீர், வெள்ளை வெட்டை, சிறுநீர்ப்பை அழற்சி, முக வாதம் ஆகியவை தீரும். 5 கிராம் வேர்ப்பட்டையை மையாய் அரைத்து பாலில் கலந்து சர்க்கரை கூட்டி இருவேளை பருகி வர அடிக்கடி சிறுநீர் கழித்தல், சீத பேதி ஆகியவை குணமாகும்.
பழம்பாசி

Spread the love