தமிழகத்தில் வெப்பம், மித வெப்பம் மற்றும் குளிர் சீதோசன நிலை இருப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் வளரும் பழபயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பழ உற்பத்தியை பெருக்க வளமான மண், உரம், இவையன்றி பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் அவசியமாகிறது. இயற்கையிலேயே வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களில் உற்பத்தி செய்யப்பட்டு தனது தேவையை நிவர்த்தி செய்கிறது. ஆனால் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் தண்ணீர் மற்றும் சூரியவெளிச்சம் முதலியவைகளில் திடீர் மாற்றம் அல்லது குறைவு ஏற்படும் போது இவ்வளர்ச்சி ஊக்கிகளின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு அல்லாமல் வினை மாற்றம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே தேவைக்கு தகுந்தாற்போல் செயற்கையான வளர்ச்சி ஊக்கிகளை பழபயிர்களுக்கு தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். இதை தவிர பழங்களை பழுக்க வைப்பதற்கும் கெடாமல் அதிக நாள் சேமித்து வைப்பதற்கும் விதைதயில்லா பழங்கள் பெருகுவதற்கும் வணிக ரீதயில் பல வகையான வளர்ச்சி ஊக்கிகள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.
மா
இம்மரம் ஒரே சீராக வருடத்திற்கு வருடம் பலன் தருவதில்லை. ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் மாறிபலன் தருகிறது. மேலும் மகசூல் குறைவதற்கு முக்கிய காரணங்கள் பூ, பிஞ்சு உதிர்தல் மற்றும் காயின் அளவு குறைதல் ஆகியவையாகும். இக்குறைகளை நிவர்த்தி செய்ய பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உபயோகப்படுத்தலாம். இதற்கு பிளானோபிகஸ் 2 மில்லி மருந்தை 4 ½ லிட்டர் தண்ணீரில் கரைத்து இதனுடன் ஒரு சதவித யூரியாக் கரைசலுடன் கலந்து இரு முறை அதாவது காய்கள் பட்டாணியின் அளவில் இருக்கும் தருணத்தில் ஒரு முறையும் அடுத்து கோலிக்குண்டு அளவு வளர்ந்த பின்பும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பிஞ்சுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
‘எத்ரல்’ என்ற வளர்ச்சி ஊக்கி மா மற்றும் சாதாரண பழ வகைகளை பழுக்க உபயோகிக்கப்படுகிறது. இதற்கு 0.5 சதவித எத்ரல் கரைசல் தேவை. அதாவது 12.5 மில்லி எத்ரலை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்தால் கிடைக்க கூடிய கரைசல் ஒரு சதவித கரைசல் ஆகும். இக்கரைசலில் 10 கிராம் சோடியம் ஹைடிராக்ஸைடு வில்லைகளை போட்டு வைத்தால் எத்திலின் வாயு வெளிவந்து பழங்களை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக பழுக்க வைகக முடியும்.
வாழை
பூவன் வாழையில் 15 முதல் 25 சதம் வரை ‘கொட்டை வாழை’ என்ற வினையியல் இடர்பாடு மகசூலை குறைத்து விடுகிறது. இக்குறைபாட்டினால் காய்கள் சிறுத்து காணப்படும். காய்களில் விதைகள் தென்படும். இதை கட்டுப்படுத்த பெர்னோக்சான் என்ற களைகொல்லி மருந்தை 1 ½ கிராம் எடுத்து 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து காய்களின் மேல் கடைசி சீப்பு வெளிவந்த 20 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும். பெர்னோக்சான் என்ற களைகொல்லி 2.4 டி என்ற வளர்ச்சி ஊக்கி வகையை சேர்ந்ததாகும். இம்மருந்தை மேற்குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக கண்டிப்பாக தெளிக்ககூடாது.
சாதாரணமாக வாழை குலையை மரத்திலிருந்து வெட்டிய பின்பு புகைபோட்டு பழுக்கவைப்பது வழக்கம். இவ்வாறு செய்யும்போது சில சமயங்களில் பழங்கள் நல்ல நிறத்துடன் பழுப்பதில்லை. மேலும் புகையின் வாசனையும் பழங்களில் இருக்கும். எத்திலின் என்ற வளர்ச்சி ஊக்கியின் அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம். எனவே இக்குறையை நிவர்த்தி செய்ய 12.5 மில்லி எத்ரலை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்தால் அதாவது இக்கரைசலின் திறன் 5000 பிபிஎம் ஆகும். ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 கிராம் சோடியம் ஹைடிராக்சைடு வில்லைகளை கலந்து பழங்களின் நடுவில் ஒரு அறையிலோ அல்லது பெட்டிக்குள்ளேயே வைத்து காற்று புகாமல் மூடிவிட்டால் 48 மணி நேரத்தில் பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக இனிப்புடனும் பழுத்திருக்கும்.
திராட்சை
திராட்சை சாகுபடியில் வளர்ச்சி ஊக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக விதையில்லா ரகங்களில் பழங்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால் பழங்கள் சிறுத்து எடை குறைந்து காண்ப்படும். இவ்வகை திராட்சையில் ஜிப்ரலிக் அமிலம் 25 பிபிஎம் என்ற அடர்த்தியில் உபயோகிக்கப்படுகிறது. இக்கரைசலை தயார் செய்ய 25 மில்லி கிராம் மருந்தை சிறிது சாராயத்தில் கரைத்து பின்பு இதை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலக்க வேண்டும். குலைகள் காய்பிடிக்க ஆரம்பிக்கும் போதும் 15 நாட்கள் கழித்துமாக இருமுறை குலைகளை கரைசலில் முழுவதும் நனையும்படி முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பழங்களின் வளர்ச்சி துரிதமாகி பழங்களின் அளவும் மகசூலும் அதிகரிக்கிறது.
எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் என்ற அடர்த்தியில் காய்பிடிப்பு ஏற்பட்டு நான்கு வாரங்கள் கழத்து தெளிப்பதால் பழங்கள் பெரிதாகவும் புளிப்பு குறைந்து, இனிப்பு அதிகமாகவும், விரைவாகவும் சருகிவும், பழுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும். இத்துடன் 2 சதவீதம் பொட்டாஸ் சல்பேட் உப்பு கரைசலையும் சேர்த்து தெளிப்பதால் பழங்கள் ஒரே சீராக பழுக்க ஏதுவாக இருக்கும்.
சப்போட்டா
பூக்கும் பருவத்தில் 300 பிபிஎம் பிளானோபிக்ஸ் என்ற வளாச்சி ஊக்கியை தெளிப்பதால் பூக்கள் உதிராமல் காய்பிடித்து அதிகமாகி மகசூல் அதிகரிக்கிறது.
சப்போட்டா பழங்கள் மரத்தில் பழுக்காது. நன்கு முற்றிய காய்களின் தோலில் நகத்தால் கீறினால் வெளிர் மஞ்சள் நிறமாக தோன்றும் மேலும் பால் வடியாது. அறுவடை செய்யும்போது காய்கள் நிலத்தில் கீழே விழாதவாறு பறிக்க வேண்டும். கீழே விழுந்த காய்கள் பழுக்காது.
பழங்கள் சாதாரணமாக சாக்கு பைகளிலோ, காற்றுபுகாத டின்களிலோ அடைத்து வைத்தால் ஒரு வாரத்திற்குள் பழங்கள் பழுத்துவிடுகிறது. புகை மூட்டத்தின் மூலம் பழங்களை பழுக்க வைக்கும்போது ஒரே சிருகி பழுக்காமல் கெட்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எத்ரல் என்ற ஊக்கியின் மூலம் சீக்கிரம் பழுக்க வைக்க முடியும். நன்கு முதிர்ந்த பழங்களை ஒரு அறையிலோ அல்லது பெட்டியிலோ வைத்து ஒரு கண்ணாடி பீக்கரில் 5 மில்லி எத்ரல் என்னும் ஊக்கியை 1 லிட்டர் நீரில் கலந்து 10 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மாத்திகைளுடன் சேர்த்து போட்டு மூடிவிட வேண்டும். இம்முறையில் 48 மணி நேரத்திற்குள் பழங்கள் பழுத்துவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் பிஞ்சுகள் உதிர்வது இயற்கை அதுவும் கோடையில் எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் ஓரளவு பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். பிஞ்சுகள் அதிகமாக உதிர்வதை தடுக்க 2.4.5டி என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கிராம் என்ற அளவில் கரைத்து இதனுடன் 0.5 சதவிதம் துத்தநாக சல்பேட் கரைசலையும் சேர்த்து காய்கள் அல்லது பிஞ்சுகள் மிளகு பருமன் இருக்கும்போது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மகசூல் கணிசமாக அதிகரிக்கலாம் என்பது ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து தெரியவருகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழ மர வகைகளிலும் பிஞ்சுகள் உதிர்வது சகஜம். ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியை 50 பிபிஎம் என்ற அளவில் கரைசல் தயார் செய்து நன்றாக பு+க்கும் பருவத்தில் செடிகள் முழுவதும் நன்கு நனையும் படியாக தெளித்தால் பிஞ்சுகள் உதிர்வதை கட்டுப்படுத்தி காய் பிடிப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.
பழங்கள் பறிப்பதற்கு முன்பே உதிர்வது, சாத்துகுடி, ஆரஞ்சு வகைகளில் சாதாரணமான ஒன்று. இவ்வாறு தானாக உதிர்வதை கட்டுப்படுத்த 2.4.5டி15 பிபிஎம் கரைசலுடன் 0.5 சதவிகதிதம் துத்தநாக கரைசலை சேர்த்து மேலும் இதனுடன் போர்டோக் கலவை (2:2:250)யையும் சேர்த்து தெளிக்க வேண்டும். சில சமயம் பழங்கள் பழுத்திருந்தாவும் அதன் நிறம் தகுந்த அளவு இல்லாத காரணத்தால் சந்தையில் நல்ல விலை கிடைப்பதல்லை. எத்ரல் 2000 பிபிஎம் கரைசலில் பழங்களை பறித்தவுடன் நனைப்பதால் பழங்கள் நல்ல மஞ்சள் நிறமாக மாறி நல்ல ஆதாயம் கிடைக்க உதவுகிறது.
பப்பாளி
பப்பாளியில் செடிகள் நட்ட 4 அல்லது 5 மாதத்தில் பூ விட ஆரம்பிக்கும். இச்சமயத்தில்தான் நட்ட செடிகள் ஆண் மரங்களா? அல்லது பெண் மரங்களா? என்பது தெரியவரும். இருபது பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற விகிதத்தில் ஆண் மரங்களை விட்டு மற்ற மரங்களை அகற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் மரங்களை 5 மாதம் தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு வளர்த்து வீணாக ஆண் மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. ஆனால் 25 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியை செடிகள் நடவு செய்த 2 ½ – 3 மாதங்களில் தெளிப்பதால் அதிக பெண் மரங்கள் தோன்ற ஏதுவாகிறது.
கூர்க் ஹனிடியு என்ற பப்பாளி ரகத்தில் விதைகள் அதிகமாக இருக்கும். ஜிபிரலிக் அமிலம் 200 பிபிஎம் கரைசலை பூக்கள் விரிவதற்கு முன்பு தெளிப்பதால் விதைகள் குறைவாகவும் பழங்கள் சுவையாகவும் இருக்க உதவுகிறது.
பப்பாளி காய்களிலிருந்து எடுக்கப்படும் பப்பெயின் உற்பத்தியை அதிகரிக்க 75 முதல் 90 நாட்கள் வரை முதிர்ச்சியுள்ள காய்களில் 200 பிபிஎம் எத்ரல் கரைசலை தெளிக்க வேண்டும். இதனால் பப்பெயின் உற்பத்தி 145 சதவிகிதம் அதிகரிக்கலாம் என ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது.
கொய்யா
இப்பழத்தில் அதிகளவில் விதைகள் இருப்பது பழத்தில் தரத்தை கெடுத்துவிடும். பழத்தின் தரத்தை உயர்த்த விதையில்லா பழங்களை உற்பத்தி செய்வது அவசியமாகிறது. விதை அதிகமாக உள்ள மரங்களில் ஜிப்ரலிக் அமிலம் 100 பிபிஎம் என்ற கரைசலை பூக்கள் விரியுமுன்பு தெளிப்பதால் விதையில்லா கொய்யா உற்பத்தி செய்ய முடியும்.
மாதுளை
மாதுளை நடவு செய்த 3-4 ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும். பூக்கள் அதிகமாக தோன்றினாலும் மரத்திற்கு குறைந்த அளவு பழங்களே கிடைக்கும். பூக்களும் பிஞ்சுகளுமாய் அதிக அளவில் உதிர்ந்துவிடும் இவற்றை கட்டுப்படுத்த அலார் என்ற வளர்ச்சி ஊக்கியை 2000 பிபிஎம் என்ற அளவில் தயார் செய்து நன்றாக பூக்கும் பருவத்தில் ஒரு முறையும் ஒரு வாரம் கழித்து மறுமுறையுமாக இரண்டு தடவைகள் தெளிக்க வேண்டும்.
அன்னாசி
அன்னாசியில் பொதுவாக பூக்கள் ஒரே சீராக தோன்றாது. இதனால் அறுவடை சீராக செய்ய முடியாது. ஒரே சீராக பூக்கள் தோன்றுவதற்கு பிளானோபிகஸ் 1 மில்லியை 4.5 லிட்டர் நீருடன் கலந்த அல்லது 100 பிபிஎம் எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளிக்கலாம். இவ்வாறு செய்வதால் பூக்கள் அதிகமாவதுடன் பழங்களின் எடையும் அதிகரிக்கிறது.
நாவல்
நாவல் மரங்களில் மலர்கள் மற்றும் பிஞ்சுகள் அதிகளவில் உதிர்கிறது. பூக்க ஆரம்பித்து முதல் ஐந்து வாரத்திற்குள் சுமார் 65 சதவித மலர்களும் பிஞ்சுகளும் உதிர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து பிஞ்சுகளும் பூக்களும உதிர்வதால் மொத்தத்தில் 85 சதவிதம் உதிர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 12 முதல் 15 சதவித மலர்களில் மட்டும் காய் பிடிப்பு ஏற்பட்டு அறுவடைக்கு வருகிறது.
பூ, பிஞ்சு உதிர்வதை கட்டுப்படுத்த ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியை 60 பிபிஎம் என்ற அளவில் இருமுறை தெளிக்க வேண்டும். அதாவது நிறைய பூக்கள் தோன்றும்போது ஒரு முறையம் பழப்பிடிப்பு ஏற்படும்போது மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
விதையில்லா பழங்களை உற்பத்தி செய்ய பூக்கும் பருவத்தில் 25 பிபிஎம் 2.4டி என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும்.
சீதாபழம்
சீதாபழ மரங்களில் ஒரு பருவத்தில் 1000 முதல் 1500 பூக்கள் தோன்றுகிறது. ஆனால் இவற்றில் இரண்டு சததவித மலர்களில் மட்டுமே மகரந்த சேர்க்கை ஏற்பட்டு காய்கள் உண்டாகிறது. இதற்கு மலர்கள் விரியும தருணத்தில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் என்ற கரைசலை தெளிப்பதன் மூலம் அதிக பு+க்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு பழங்களின் எண்ணிக்கையும் எடையும் அதிகமாகிறது.
ஆப்பிள்
பொதுவாக ஆப்பிள் பறிப்பதற்கு முன்பு தானகவே ஓரளவு விழுந்து விடும். இச்சேதத்தை தவிர்க்க பிளோனோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 20 பிபிஎம் என்ற அளவில் பழங்கள் பறிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தெளித்து பழங்கள் உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.
பேரி
பழங்கள் பழுக்கும்போது 5 பிபிஎம் பிளோனோபிக்ஸ் தெளிப்பதால் பழங்கள் பழுத்த பின்பு கீழே விழாமல் தவிர்க்க முடியும்.
ப்ளம்ஸ்
இப்பழம் பழுக்கும் சமயத்தில் ஓரளவு உதிர்ந்துவிடும். இதனால் மகசூல் பாதிக்ப்படுகிறது. 2.4 டி என்ற வளர்ச்சி ஊக்கியை 10 பிபிம் என்ற அளவில் தெளிப்பதால் பழங்கள் விழுவதை கட்டுப்படுத்த முடியும்.
பீச்
இப்பழமரத்தில் பூக்கள் அதிகளவில் உதிர்வதை கட்டுப்படுத்த 10 பிபிஎம் பிளோனோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை பூக்கள் விரிவதற்கு முன்பு தெளிப்பதால் பூக்கள் உதிர்வதை 14 சதவிதம் வரை குறைக்க முடியும் என ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பழ மர உற்பத்தியில் பயன்படுவதோடு பழங்களை சேமிப்பதற்கும் பயன்படுகிறது. குறிப்பாக எலுமிச்சையை சேமிக்கும் முன் 2.4 டி என்ற வளாச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மிலி கலந்து அதில் இரண்டு நிமிடம் மூழ்க வைத்து சேமிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிக நாட்கள் வரை கெடாமல் சேமிக்க முடியும்.
பொதுவாக வளர்ச்சி ஊக்கிகளை தேவைக்கு அதிகமாக உபயோகிக்க கூடாது. வளர்ச்சி ஊக்கிகளை முதலில் எரி சாராயத்தில் கரைத்து பின்பு தண்ணீரில் கரைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும். காலையிலோ அல்லது மாலையிலோ தெளிக்கும்மபோது ஒரு சதவித டிவின் 20 அல்லது சோப்பு கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வளர்ச்சி ஊக்கிகளினால் ஏற்படக்கூடிய பலன் அதிகமாக இருக்கும்.
டாக்டர் பா.இளங்கோவன், மேலும் விபரம் பெற 98420 07125 உள்ளது.