மும்பை, மே 18
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் முதன்முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வா இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21வது நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் செயல்பாடுகள் மூலமாக ரூ.25,747 கோடியை ஈட்டியது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.23,019 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.9 சதம் அதிகமாகும்.
மேலும், இந்திய செயல்பாடுகள் மூலமாக நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயானது மதிப்பீட்டு காலாண்டில் ரூ.16,734.3 கோடியிலிருந்து 10 சதம் அதிகரித்து ரூ.18,337.8 கோடியானது.
கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 4லது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகரலாபமாக ரூ.759 கோடியைப் பெற்றது. அதேபோன்று, நிறுவனத்தின் ஆண்டு மொத்த விற்றுமுதலும் முதன் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அதேசமயம், முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நிறுவனம் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்தது. மேலும், மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் சர்வதேச வாடிக்கையாளர் எண்ணிக்கை 47 கோடியாக இருந்தது என்றார் அவர்.