January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பார்த்தீனிய களைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியம் மனிதனுக்கும், விலங்கு களுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பாதக மான செடி. இந்த செடியினால் ஆஸ்த்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மனிதனுக்கு உண்டாகிறது. கால்நடைகள் செடிகளின் வழியாக நடக்கும்போது அல்லது அதை நுகரும்போது காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகின்றது.
இவ்வகை பார்த்தீனிய களைகளை கட்டுப்படுத்த அட்ரசின் களைக்கொல்லி 4 கிராம்/லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் எக்டருக்கு 500 லிட்டர் நீரில் கலந்து களைகள் முளைக்குமுன் தெளித்தல் வேண்டும். சமையல் உப்பு 200 கிராம் + 2 மி.லி சோப்பு திரவத்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து களைகளின் மீது நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும் கிளைபோசேட் 10 மி.லி + 20 கிராம் அமோனியம் சல்பேட் + 2 மி.லி சோப்பு திரவம் 1 லிட்டரில் கலந்து பூப்பதற்கு முன் தெளிக்க வேண்டும்.

பொதுவாக பார்த்தீனிய செடிகளை கையுறை கொண்டு அல்லது கருவி உபயோகித்து பூப்பதற்கு முன் களைகளை வேருடன் அகற்றி அதை மட்கச்செய்து இயற்கை உரமாகவும் பயன்படு த்தலாம். பார்த்தீனிய செடிகளை 5 முதல் 10 செ.மீ அளவு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10 சதவீத மாட்டு சாணக் கரைசலைக் கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மட்க விட்டு அதன்பிறகு 250 முதல் 300 மண்புழுக்களை விட்டு ஈரப்பதம் 60 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பார்த்தீனிய மக்கு உரம் 40 முதல் 60 நாட்களில் தயாராகி விடும். இந்த உரத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 1.15, 0.44, 0.97 சதவீதமாக உள்ளது. இது தொழு உரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை கொண்டு பார்த்தீனியச் செடியினை மக்க வைக்கலாம். முதலில் 5 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தை நன்கு கரைத்து பின்பு அதனுடன் 195 லிட்டர் சுத்தமான நீரைச் சேர்க்க வேண்டும். இதனுடன் வேஸ்ட் டீகம்போஸர் தாய்வித்தை கலந்து வலது மற்றும் இடது புறமாக சுத்தமான குச்சி கொண்டு காலை, மாலை இரண்டு முறை கலக்க வெண்டும். சுத்தமான துணி கொண்டு வாய் பகுதியினை மூடவேண்டும். பத்து நாட்களில் வேஸ்ட் டீகம்போஸர் திரவம் தயாராகி விடும்.

அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய பார்த்தீனியத்தை மேற்கூறிய முறைகளை பயன்படுத்தி அதன் பாதிப்பை முற்றிலுமாக கட்டுப் படுத்துமாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் சீ. கிருஷ்ணகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முனைவர் இராமசுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்கள்.

Spread the love