புது தில்லி, ஏப்.20
இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 2013-14 நிதியாண்டில் 2925 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2021-22 நிதியாண்டில் 6115 மில்லியன் அமெரிக்க டாலர்களாக 109% அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரக தரவுகளின்படி, 2021-22-ல் உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கு இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. 2021-22-ல் 150 நாடுகளில் 76 நாடுகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதியின் பன்முகத்தன்மையை இது குறிக்கிறது.
இது குறித்து மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகள் உலக சந்தைகளை அணுகுவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவுகின்றன என்று கூறியுள்ளார்.
2019-20-ல் 2015 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்றும் 2020-21-ல் இது 4799 மில்லியன் டாலர்களாகவும், 2021-22-ல் 6115 மில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது என்றும் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரக தரவுகள் தெரிவிக்கின்றன.
2021-22-ம் ஆண்டில் 27% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள நிலையில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி 6115 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அனைத்து விவசாயப் பொருட்களுடன் ஒப்பிடும் போது அந்நிய செலாவணி வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது.