புது தில்லி, மே 12
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. 5805 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.மேலும் 7049 டன் திறன் உடைய 374 ஆக்சிஜன் டேங்கர்கள் விமானம் வாயிலாக பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும், இந்திய விமானப்படை உதவியுடன் 81 கன்டெய்னர்களில் 1407 டன் எடை உடைய ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் வாயிலாக 637 திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளன.
இவற்றை தவிர ஸ்டீல் தொழிற்சாலைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 630 டன் ஆக்சிஜன் பெறப்படுகின்றன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து தினமும் 663 டன் ஆக்சிஜன் பெறப்படுகின்றன.எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட பல தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் ஆக்சிஜன் உதவியுடன் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் உடைய மருத்துவமனை அமைய உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.