May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில் ஆதார் புதுப்பித்தல்

அரியலூர், மார்ச் 12

அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்த்தல் அவசியம் ஆகும். தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக ரூ.15/- இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 31.03.2022ம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி தெரிவித்தார்.

Spread the love