ஜமுனாபாரி மற்றும் மலபாரி இன வெள்ளாடுகளை ஒத்த மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற இந்த பீட்டல் இன வெள்ளாடுகளின் பூர்வீகம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலமும் பாகிஸ்தானும் ஆகும். இதனை லாகோரி வெள்ளாடுகள் என்றும் அழைக்கின்றனர்.
பெரிய உடம்பினைக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அதிகமாக இறைச்சிக்காகவும், பால்மடி பெரிதாயிருப்பதால் அதிகமான பாலிற்காகவும் இந்த இனம் மக்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.
ஜமுனாபாரி இன வெள்ளாடுகளைப் போலவே இதற்கும் காதுகள் மடங்கியும் நீளமாகவும் கீழே தொங்கிக் கொண்டும் இருக்கின்றது. இதன் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் உயரிய பண்பும் வலிமையும் கொண்டிருக்கிற காரணத்தால், அதனைக் கொண்டு பனிக்கால உடைகள், மேலாடை, காலணிகள் மற்றும் கையுறைகள் தயாரிக்க அதிகம் பயன் பெறுவதோடு இதிலிருந்து தயாரித்த உடைகளை மக்கள் அதிகம் விரும்பவும் செய்கின்றனர்.
நற்பண்புகள் மற்றும் பயன்கள் மிகுந்த இவ்வின வெள்ளாட்டுக் கிடாய்கள் மூலம் அங்கேயுள்ள நாட்டு ரக வெள்ளாடுகளைத் தரம் உயரத்தப் பயன்படுத்துகின்றனர். இவ்வகை வெள்ளாடுகள் மேய்ச்சலுக்கு அதிக விடாமல் கட்டிடங்களிலும் கட்டுத்தரையிலும் உயரமான பரண் அமைத்தும் பராமரிக்கப்படவதால் லாபம் தருகிறது எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வகைப் பழக்கத்திற்கு இவ்வின ஆடுகள் தோதுவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆகவே தீவிர வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைத்து வளர்க்கவும் செய்கின்றனர்.
தோலின் நிறம் கருப்பாகவும், செம்மை கலந்த பழுப்பாகவும் இருக்கிறது. வெள்ளை நிறத்தில் கருப்பு வண்ண பட்டைகள் கொண்டதாகவும், மாநிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் கொண்டதாகவும் பளுப்பு வண்ணத்தில் வெண் புள்ளிகளோடம் காட்சி தருகின்றது.
எந்த சீதோஷ்ண சூழ்நிலையிலும், தன்னை மாற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொண்ட இனம் இந்த பீட்டல். நீண்ட உடல்வாகினையும், பெரிய உடலமைப்பினையும் இவ்வினம் கொண்டிருந்தாலும், ஜமுனாபாரி இனத்தை விட சற்று சிறியதாகவே இவ்வினம் தெரிகிறது.
கால்களின் நீளம் சற்று அதிகமாக உள்ளது. வால் பகுதி குட்டையாகவே இருக்கிறது. வருடத்திற்கு இரண்டு குட்டிகளையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஆறு குட்டிகளையோ ஈனும் திறன் பெற்றிருக்கின்றது.
தலை சற்று பருத்ததாகவும், அகலமானதாகவும் ரோமன் மூக்கினையும் கொண்டிருக்கின்றது. கிடாக்களுக்கு சற்று பெரியதாகவும், பிறவிக் குட்டிகளுக்கு சற்று சிறியதாகவும் கொம்பு அமைந்திருக்கிறது. 20, 22 மாதங்களில் முதல் குட்டி ஈனுகிறது.
கிடாக்குட்டிகள் முழு வளர்ச்சியில் 65 கிலோவும், பிறவிக்குட்டிகள் 45 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கிறது. பால்மடி நன்கு பெருத்து கீழே தொங்கிய வண்ணம் இருக்கிறது. காம்புகள் நன்கு நீண்டு தடித்துக் காணப்படுகிறது. பாலின் அளவு தினசரி சராசரியாக 2.5 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை இருக்கிறது.