July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு, ஜூலை 22

ஆடி மாதம் துவங்கி மழை பரவலாக பெய்து வருவதால் கால்நடைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டியில் மாடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.2 கோடிக்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 வாரமாக சந்தை செயல்படுகிறது. இந்நிலையில் ஜூலை 22ல் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 50 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர்.

எருமைகள் ரூ.16,000 முதல் ரூ.35,000, கறுப்பு வெள்ளை மாடு ரூ.22,000 முதல் ரூ.47,000, ஜெர்சி ரூ.23,000 முதல் ரூ.52,000, சிந்து ரூ.15,000 முதல் ரூ.38,000, நாட்டுமாடு ரூ.40,000 முதல் ரூ.78,000 வரை, வளர்ப்பு கன்றுகள் ரூ.6,000 முதல் ரூ.14,000 வரையும் விற்பனையானது. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு விற்பனையானது.

Spread the love