புது தில்லி, மே 11
வாட்ஸ் அப்பில் புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது குறித்த கொள்கை விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும், மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பல்வேறு எதிர்ப்புக்குப் பின்னர், மே 15க்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இதை நினைவுபடுத்தும் விதமான வாட்ஸ் அப் தற்போது தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்த செய்யப்படும். இதன்படி, பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.
ஆனால், இன்கம்மிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ கால்களில் பேச முடியும். நோட்டிபிகேசன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து, பதிலளிக்க முடியும், மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால்களை அழைத்து பேச முடியும். அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும். இந்த நினைவூட்டல் ஒரே நேரத்தில் எல்லா பயனாளர்களுக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.