புதிய 2021 செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது கியா நிறுவனம்.
இந்தியச் சந்தையில் இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து அந்தக் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ், பாக்டீரியாவைத் தடுக்கும் அம்சங்கள் இந்தக் கார்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களுக்கும் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
2021 செல்டோஸ் எஸ்யூவியின் வேரியண்ட்களின் ஆரம்ப விலை ரூ.9,95,000 ஆகவும், 2021 சொனெட் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.6,79,000 ஆகவும் இருகிறது.
சொனெட் காரைத் தொடர்ந்து ஐஎம்டி தொழில்நுட்பம் தற்போது செல்டோஸ் எஸ்யூவியிலும் வழங்கப்பட்டுள்ளது.
செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹெச்டிகே+ப்ளஸ் வேரியண்ட்டில் ஐஎம்டி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் ஐஎம்டி தொழில்நுட்பத்தை பெறும் முதல் கார் என்ற பெருமை கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ளது.
ஏனெனில் கிரெட்டா எஸ்யூவியில் ஐஎம்டி தொழில்நுட்பத்தை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை. அதேவேளையில் சொனெட் எஸ்யூவியின் போட்டி வாகனமாக உள்ள வென்யூ எஸ்யூவியில் ஐஎம்டி தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது ஹூண்டாய். அத்துடன் ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் எஸ்யூவியில் 1.4டி-ஜிடிஐ பெட்ரோல் ஜிடிஎக்ஸ் ஆப்சனலாக தரப்படுகிறது.
ஸ்மார்ட் ப்யூர் ஏர் ப்யூரிஃபையர் உள்பட 17 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவோ கனெக்டட் கார் தொழில்நுட்பத்தில், சன்ரூஃப்பை இயக்குவதற்கான வாய்ஸ் கமாண்ட் உள்பட வாய்ஸ் அசிஸ்ட் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் அஸிஸ்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் புதிய செல்டோஸ் எஸ்யூவியில் தரப்பட்டுள்ளது. அதேவேளையில் 2021 சொனெட் எஸ்யூவியில் 10 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.