August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய மிடில்வெயிட் பைக் தயாரிப்பில் ஹீரோ மோட்டோகார்ப்

புதிய மிடில்வெயிட் பைக் தயாரிப்பில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிறுவனம் மிடில்வெயிட் பிரிவில் 350சிசி முதல் 700சிசி வரை திறன் கொண்ட பைக்குகளை தயாரித்து வருகிறது.

இருப்பினும் இந்தப் பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் பிரிவில் சந்தை வாய்ப்புகளைப் பெறும் நோக்கத்தில் புதிய பைக் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹீரோ நிறுவனம், சூப்பர் பைக்குகள் தயாரிப்பில் பிரபலமாக உள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் கூட்டுறவை ஏற்படுத்தி இருப்பது அந்த நிறுவனத்திற்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டுறவில் ஹார்லி-டேவிட்சன் பிராண்டிற்காக 500சிசி மோட்டார்சைக்கிள் ஒன்றை ஹீரோ தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஹீரோ பிராண்டிலும் இந்த மோட்டார் சைக்கிள் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிளுக்கு பெரும் வரவேற்பு உள்ளதால் இந்தப் பிரிவைக் குறிவைத்திருப்பதாகவும், கரிஷ்மா பைக்கிற்குப் பின்பு இரண்டாவதாக 225சிசிக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் ஹீரோ தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டுவின் பைக்குகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரிவைக் குறிவைத்து பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பிராண்ட்களுடனும், டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடனும் கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love