August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புளி விலை வீழ்ச்சி

சேலம், மே 8

மலைக் கிராமங்களில் புளி மகசூல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சேலம் மாவட்ட எல்லையிலுள்ள அருநூற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலைக் கிராமங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீர்த்தமலை பகுதிகளிலும் 200-கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.

இம்மலைக் கிராமங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில் பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளிய மரங்களை மலைக்கிராம விவசாயிகள் பயிரிட்டு தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களிலும் பாரம்பரிய முறையிலும், குறைந்த நாள்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும் சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளிய மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட மலைக் கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புளிய மரங்களில் பூக்கள் பூத்து பிஞ்சு விட்டு காய்க்கத் தொடங்கிய தருணத்தில் மலைக் கிராமங்களில் பலத்த காற்றோ புயலோ இல்லாமல் அவ்வப்போது பரவலாக மழை பெய்ததால், நிகழாண்டு புளி மகசூல் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ரூ.190 வரை விலைபோன ஒரு கிலோ புளி தற்போது ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்குத் தேவையான அளவுக்கு புளியை கொள்முதல் செய்து வெயிலில் உலர்த்தி இருப்பு வைத்துக் கொண்டு சமையலுக்கு பயன்படுத்துவதில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி, உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நுகா்வோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Spread the love