May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு சாலையில் கொட்டும் அவலம்

கிருஷ்ணகிரி, மே 17

கரோனா ஊரடங்கால், பூக்கடைகள் செயல்பட அரசு அனுமதி மறுத்துள்ளதால், ஓசூரில் உள்ள மார்க்கெட்டுகள் மூடப்பட்டு, சாலையோரங்களில் பூக்கள் கொட்டப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யும் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, பட்டன் ரோஜா, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள இரு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். நாளொன்றுக்கு, 250 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். அவற்றை பூக்கடை நடத்தி வருபவர்கள், சாலையோர வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கின்றனர். மேலும் இங்கிருந்து, தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்கள், மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பூக்கள் தடைப்பட்டுள்ளன. திருவிழா, தேரோட்டம் போன்றவை நடத்த அரசு தடை விதித்துள்ளதுடன், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால், பூ வியாபாரம் பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டன. அவை விற்பனையாகாமல், 100 டன்னுக்கு மேல் தேக்கம் அடைந்ததால், விவசாயிகளிடம் பூக்கள் வாங்குவதை வியாபாரிகள் குறைத்தனர். இதனால், விவசாயிகள் பலர் செடிகளில் பறிக்காமல் பூக்களை விட்டுள்ளனர். இந்நிலையில், பூக்கடைகள் செயல்பட ஞாயிற்றுகிழமை முதல் அனுமதி கிடையாது என, அரசு அறிவித்துள்ளது. அதனால் ஓசூரில் உள்ள பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்த பூக்கள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளி நாடுகள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ரோஜாக்கள், பறிக்காமல் செடிகளில் வீணாகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Spread the love