July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை, மே 13

ஆலங்குடி பகுதியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கீழாத்தூர், அணவயல் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மல்லிகை, சம்மங்கி, காட்டுமல்லி, செண்டுப்பூ உள்ளிட்ட பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில், இப்பகுதியில் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்ததால், பெரும்பாலான விவசாயிகளுக்கு மலர் சாகுபடியே வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் முன்பு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500 முதல் ரூ.1000 வரையிலும், சம்பங்கி, செண்டுப்பூ கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்பனையானது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழுப் பொது முடக்கத்தினால் திருமணம் உள்ளிட்ட விஷேங்களுக்கு கட்டுப்பாடும், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது விவசாயிகளிடமிருந்து மல்லிகை கிலோ ரூ.50க்கும், சம்மங்கி, செண்டுப்பூ கிலோ ரூ.5க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், இந்த விலைக்கு கூட பூக்களை சில வியாபாரிகள் வாங்க மறுப்பதாலும், அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என்பதாலும், பல விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டிச்செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Spread the love