August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்கள் விலை கடும் சரிவு

திண்டுக்கல், மே 6

பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்படும் பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. அவை இங்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டு சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் வெளியூர் வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கிச் செல்வார்கள். இது மட்டுமின்றி மாலையாக தொடுத்து பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் கோவில் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருமணம் போன்ற விசே‌ஷங்களும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் பூக்கள் குறைந்த அளவு விலையிலேயே வாங்கப்படுகிறது. வழக்கமாக கோடை காலத்தில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகும். ஆனால் தற்போது விலை கடும் சரிவடைந்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே பூக்களை விட்டுள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் கிடைத்த பணத்துக்கு விற்பனை செய்துவிட்டுச் செல்கின்றனர். மேலும் பலர் போதிய விலை கிடைக்காமல் குப்பையில் வீசிச் செல்கின்றனர். அவ்வாறு குப்பையில் வீசும் பூக்களை பதப்படுத்தி சிலர் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கோவில் விழாக்கள் மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தால்தான் பூக்களின் தேவையும் அதிகரிக்கும். இல்லையெனில் பூ வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

Spread the love