August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்

விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்

விருதுநகர், ஜூலை 21

பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் என்று விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ் தெரிவித்தார்.

கோடை உழவு செய்தல்
கோடை உழவு செய்வதன் மூலம் ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கப்பெறும் மழை முறையாக மண்ணுக்கு கிடைப்பதுடன் பூச்சிகளை அழிக்கவும் பயன்படுகிறது. கோடை உழவின் போது மண்ணுக்கு அடியில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு, அவை சூரிய ஒளியின் வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்படுகின்றன. மேலும், நோய் தாக்கும் பூஞ்சைகளின் வித்துக்கூடுகளையும் அழிக்க வாய்ப்பாக அமைகிறது. அறுவடை செய்யப்பட்ட தாள்களின் எஞ்சிய பாகங்களை மடக்கி உழுவதன் மூலம் கூண்டுப்புழு, மாவுப்பூச்சி மற்றும் தண்டுதுளைப்பான் ஆகிய பூச்சிகளையும் அழிக்க முடியும்.

பயறுவகை பயிரிடுதல்
வரப்புகளில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிரிடுவதன் மூலம் அவற்றை அசுவினி போன்ற பூச்சிகள் தாக்கும். இந்த அசுவினி பூச்சி நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை உண்டு வாழும். சிலந்தி மற்றும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாக அமையும் இதன்மூலம் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பெருக்க முடியும். மேலும், வரப்பு பயிர்களில் இருந்து வீட்டுக்குத் தேவையான உளுந்து மற்றும் பச்சைப்பயறு கிடைக்க வாய்ப்பாக அமையும்.

உரப்பயிர்களை பயிரிடுதல்
தக்கைப்பூண்டு, சணப்பு, மணிலா, அகத்தி, தட்டைப்பயறு மற்றும் நரிப்பயிர் ஆகிய பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுவதன் மூலம், பயிருக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கும். இதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து பயிரை, பூச்சி தாக்குதலில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

பயிர் சுழற்சி முறை
வயலில் தொடர்ச்சியாக நெற்பயிரை பயிரிடாமல் நெற்பயிருக்கு பிறகு உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் முழுமையான வாழ்க்கை சுழற்சியை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். இப்படி அவற்றின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். இந்த உழவியல் முறைகளை விவசாயிகள் பின்பற்றி, பூச்சிகளை மேலாண்மை செய்து தங்கள் விளைச்சலை பெருக்கிடலாம்.

இதனை, விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், த.சுப்பாராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Spread the love