August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூச்சி மேலாண்மையில் உழவியல் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டு முறைகள்

சிவகங்கை, ஜூலை 11

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கீழ்கண்ட பூச்சி மேலாண்மையில் உழவியல் மற்றும் இயந்நிர கட்டுப்பாட்டு முறைகள் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

கவர்ச்சிப் பயிர்கள்
ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பயிர் மிகவும் விரும்பத்தக்க உணவுப்பயிராக விளங்கிடும். அவ்வாறான பயிர்களை கவர்ச்சிப் பயிர் என்று அழைக்கின்றோம். கவர்ச்சிப் பயிர்களை முக்கியப் பயிர்களினுடே ஓரிருவரிசையிலோ, வரப்புகளிலோ பயிரிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக பூச்சிகள் கவர்ச்சிப் பயிர்களில் முதலில் தாக்குதலை துவக்கும். அப்போது அவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. இதன் மூலம் முக்கியப் பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தை முன்கூட்டியே தடுத்திட முடியும். அங்கக பூச்சி மேலாண்மையில் பயன்படுத்தப்படும் கவர்ச்சிப் பயிர்கள்.

பூச்சி மேலாண்மையில் கவர்ச்சி பயிர்கள்

முக்கியப் பயிர் கவர்ச்சிப்பயிர் கவரப்படும் தாய்ப்பூச்சி
பருத்தி, தக்காளி, துவரை செண்டுமல்லி பச்சைக் காய்ப்புழு
பருத்தி, நிலக்கடலை சோளம் குருத்துஈ, தண்டுதுளைப்பான்
பருத்தி வெங்காயம், பூண்டு இலைப்பேன்
பருத்தி, தக்காளி, நிலக்கடலை ஆமணக்கு புருடீனியாப் புழு

இயந்திர முறைகள்
இயந்திரக் கருவிகளின் உதவியுடன் பூச்சிகளை சேகரித்து அழிப்பது இயந்திர முறை பூச்சி மேலாண்மையாகும். கீழக்காணும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அங்கக வேளாண்மையில் பூச்சிகளின் தாக்குதலை குறைத்திடலாம்.

விளக்குப்பொறி
பெரும்பாலான விட்டில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வெளிச்சத்தால் கவரப்படுபவை. எனவே, இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை வயல்களில் விளக்குப் பொறிகளை வைப்பதன் மூலம் அந்துப்பூச்சிகள் மற்றும் வண்டுகளால் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இவற்றால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. பல்வேறு வகையான விளக்குப்பொறிகள் பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் மண்ணெண்ணெய் விளக்குப்பெறி, மின்சாரவிளக்குப்பொறி, சோலார் விளக்குப்பொறி மற்றும் புறஊதாக்கதிர் விளக்குப்பொறி போன்றவை பூச்சிக் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. அந்துப் பூச்சிகள் பயிரில் தென்பட்டவுடனேயோ அல்லது அவைகள் முட்டையிடுமுன்போ விளக்குப் பொறிகளைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும். விளக்குப்பொறி கொண்டு வயல்களில் ஒரு குறிப்பிட்ட வகை பூச்சியின் செயல்பாட்டினை கண்காணித்திடலாம்.

· இரவு 11 மணிக்கு மேல் விளக்குபொறிகளை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவை நன்மைசெய்யும் பூச்சிகளுக்கு தீங்காகஅமைந்திடும்.

வண்ண ஒட்டும் பொறிகள்
காற்றினால் எளிதில் அடித்துச் செல்லப்படும் சிறிய உடலமைப்பினைக் கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுடையவை. வண்ணஅட்டைகளில் ஒட்டும் பசை (ஆமணக்கு எண்ணெய், வாசலின், கிரீஸ்) தடவப்பட்டு பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தினை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
· பூச்சிகளை கண்காணிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவிலும், அவற்றைக் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 25 என்றஅளவிலும் ஒட்டும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
· ஒட்டும் பொறிகளின் அடிப்பாகம் பயிர்களின் நுனிபாகத்தில் பொருந்துமாறு வயல்களில் பொருத்த வேண்டும்.
பூச்சிகளுக்கு ஒத்த வண்ண ஒட்டும் பொறிகள்

பொறியின் நிறம் கவரப்படும் பூச்சியினம்
மஞ்சள் வெள்ளைஈ,அசுவினி,இலைப்பேன்,திராட்சை உண்ணிவண்டு, பழ ஈ,முட்டைகோசுஈ, சுருள் பூச்சி
நீலம் இலைப்பேன்,முட்டைக்கோசுஈ,பருத்திக்காய் கூண்வண்டு
ஊதா இலைப்பேன்,பூப்பேன்
பச்சை பழ ஈ,பருத்திக்காய் கூண்வண்டு
வெள்ளை இலைப்பேன்,பருத்திக்காய் கூன்வண்டு
ஆரஞ்சு தத்துப் பூச்சிகள்

வண்ண ஒட்டும் பொறிகளை 10 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து தேவைப்படின் ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவிவிட வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயிண்ட் காலிடப்பா,பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்பாலின்களை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு ஒட்டும் திரவம் தடவி ஒட்டும் பொறிகளாக பயன்படுத்தலாம்.

இனக்கவர்ச்சிப் பொறிகள்
பூச்சிகள் ஒன்றோடொன்று தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இனப்பெருக்கத்திற்காகவும், ஒருவிதமான வாசனை திரவத்தினை சுரந்து காற்றில் பரப்பிவிடுகின்றன.

இந்ததிரவம் இனக்கவர்ச்சி திரவம் என்று அழைக்கப்படுகின்றது. பூச்சிகளால் சுரக்கப்படும் இனக்கவர்ச்சி திரவத்தின் தன்மை மற்றும் அவற்றின் பண்புகள் கண்டறியப்பட்டு, அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பூச்சிகளை கவர்ந்து அழித்திட பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆண்,பெண் பூச்சிகளை தனித் தனியாகவோ அல்லது இரண்டினையும் கூட்டாகவோ கவர்ந்து அழித்திடலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பயிரில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா, இல்லையா என கண்டறிந்திடலாம். மேலும், பூச்சிகளை குழப்பமடையச் செய்து இனச் சேர்க்கை நடைபெறாமல் தடுத்திடலாம்.இனக்கவர்ச்சிப் பொறிகள் பல்வேறு உருவங்களிலும்,வண்ணங்களிலும் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றுள்,

· “ஜாக்சன்”மற்றும் “மெக்பாளி”வகைப் பொறிகள் பழ ஈக்களுக்காகவும்
· ராம்ஸ் வகைவண்டுகள் மற்றும் கூண்வண்டுகளுக்காகவும்
· புணல் வகைப் பொறி தண்டுத் துளைப்பான்,காய்த் துளைப்பான் மற்றும் கொட்டைத் துளைப்பான்களுக்காவும்
· இறக்கை மற்றும் ஸிலிவ் வகைப் பொறிகள் அந்துப் பூச்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அங்கக பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறிகள்

பூச்சி இனக்கவர்ச்சி திரவம் பயிர்

தண்டுத் துளைப்பான் சிர்போலூர் நெல்
பச்சைக்காய் புழு ஹெலிலூர் பருத்தி, தக்காளி, துவரை, வெண்டை, சூரியகாந்தி, மிளகாய், மக்காச்சோளம், கொண்டக்கடலை, செண்டுமல்லி
புருட்டீனியா புழு ஸ்போடொலூர் தக்காளி, வெண்டை, ஆமணக்கு, நிலக்கடலை, பருத்தி, நெல், முட்டைக்கோசு, வெங்காயம், சம்பங்கி, புகையிலை
பழ ஈ படோர்லூர் மா, வாழை, ஆரஞ்சு
இலைக் குடையும் பூச்சி டிஎல்எம்லூர் தக்காளி
குருத்துமற்றும் காய் புழு லூசிலூர் கத்தரி
புள்ளிக்காய்ப் புழு எர்விட்லூர் அவரை, வெண்டை, பருத்தி
முள்ளுள்ளகாய்ப் புழு எர்வின்லூர் அவரை, வெண்டை, பருத்தி
பழ ஈ பேகுலூர் புடலை, பாகல், பீர்க்கு
வைரமுதுகுப் பூச்சி டிபிஎம்லூர் முட்டைக்கோசு, பூ கோசு, நூல்கோல், முள்ளங்கி, கடுகு
சுருள் பூச்சி ஜிஎல்எம்லூர் நிலக்கடலை
காண்டாமிருகவண்டு ரைனோலூர் தென்னை, பனை,எண்ணெய்ப் பனை
சிவப்புக் கூண் வண்டு பெரோலூர் தென்னை, பனை,எண்ணெய்ப் பனை
இளஞ்சிவப்புக் காய்ப் புழு பெக்டினோலூர் பருத்தி
இளங்குருத்துப் புழு ஈஎஸ்பிலூர் கரும்பு
இடைக்கணுப்புழு ஐஎன்பிலூர் கரும்பு
நுனிக்குருத்துப்புழு எஸ்டிபிலூர் கரும்பு

இனக்கவர்ச்சி பொறிகளை பயிர்களின் இலைப்பரப்பிற்குமேல் இருக்கும்படி பொருத்துவது மிகவும் அவசியமான தொன்றாகும்.

தீனிப்பொறி
பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சிப் பொருள் கவர்ச்சிப் பொறியினுள் வைக்கப்பட்டு பூச்சிகள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. உதாரணமாக,

· சோளத்தில் குருத்துப் ஈக்களை கட்டுப்படுத்திட கருவாட்டுப் பொறி பயன் படுத்தப்படுகிறது. இவற்றில் கருவாட்டுத் துகள்கள் பாலித்தீன் பையிலோ (அல்லது) பிளாஸ்டிக் டப்பாவிலோ வைக்கப்படுகிறது. இவற்றில் கவரப்படும் பூச்சிகளை கொல்ல டை க்குளோர்வாஸ் நணைக்கப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்படுகிறது. இதைப் போலவே தோட்டக்கலைப் பயிர்களைத் தாக்கும் பழ ஈக்களை கவர்ந்தழித்திட மீதைல் யு+ஜினால் பயன்படுத்தப்படுகின்றது. இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தலாம் என எடுத்து கூறினார்.

Spread the love