June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறை (அ) களஞ்சியக் குளிரூட்டி

தோட்டக்கலை பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் எளிதில் அழுகக்கூடியவை. அவற்றின் அடுக்கு வாழ்க்கை மிகவும் குறைந்த நாட்கள். நம் நாட்டில் காய்கனிகளின் அறுவடை பின் காலத்தில் ஏற்படும் இழப்பு 20-50% வரை உள்ளது இம்மாதிரியான இழப்புகளை குறைப்பதற்கு குளிரூட்டும் அரை, குளிர்சாதனப்பெட்டி, சேமிப்புக்கிடங்கு போன்றவற்றை உபயோகிக்கலாம் . ஆனால்சராசரியாக ரூ. 167 லட்சம் தேவைப்படும். சேமிப்புக்கிடங்கிற்கு ஏற்றி செல்லும் போக்குவரத்து செலவு,அவற்றிற்கு கொடுக்கும் வாடகை போன்ற செலவுகளை அணைத்து விவசாய மக்களால் செய்ய முடிவதில்லை. இதனால் அறுவடை பொருட்களின் இழப்பே அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய் மற்றும் பழங்களின் அளவு குறைந்து விடுகிறது.

இம்மாதிரியான குறைபாடுகள் நீங்க இயற்கை முறையாகவும், குறைந்தபட்ச விலையிலும், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மிக உதவியாக இருக்கும் வகையில் களஞ்சியக் குளிரூட்டி என சொல்லப்படும் பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டியை பின்பற்றலாம் . இது காய்கனிகளின் அடுக்கு வாழ்வை 4-5 நாள் வரை அதிகப்படுத்தும்.

பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டி :

இந்த குளிரூட்டியை பயன்படுத்த மின்சாரம் போன்ற எந்த ஆற்றலும் தேவையில்லை. இக்குளிரூட்டி ஆவியாகி குளிர்வித்தல் கொள்கையில் செயல்படுகிறது. அதாவது தண்ணீர் ஆவியாகி அவ்விடத்தின் வெப்ப நிலையை குறைக்கும். ஆதலால் அங்கு குளிர் நிலை இருக்கும்.

இதை அமைப்பதற்கு, அடித்தளத்தில் இருந்து ஒரு வரிசை மட்டும் செங்கற்களை அடுக்கவும். செங்கற்களை வைத்து இரண்டு அடுக்கு சுவர் எழுப்ப வேண்டும். இவ்விரு அடுக்குகளுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டும். அவ்விடை வெளியில் ஆற்று மணலை நிரப்பவும். இதை மூடுவதற்கு தென்னங்கீற்று, மூங்கில் அல்லது சாக்கு துணியை பயன்படுத்தலாம்.

முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது அம்மணல் முழுவதும் ஈரமாகும் வரை தண்ணீர் விடவும். அதன் பிறகு காலை மற்றும் மாலை ஒரு முறை தெளித்தால் போதும். இப்படி செய்வதனால் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரித்துக் கொள்ளலாம்.

கட்டுவதற்கு தேவையான பொருட்கள் : செங்கல், மணல், மூங்கில், சணல் பை, வைக்கோல்.

இடம் தேர்ந்தெடுத்தல் : தேர்வு செய்யும் இடம் குளிர்ச்சியாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். சீரான வடிகால் வசதி இருக்க வேண்டும். நீர் ஆதாரத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.

கட்டும் முறை : முதலில் செங்கற்களை கொண்டு 165×115 செ.மீ நீளத்திற்க்கு அடித்தளம் அமைக்க வேண்டும். செங்கற்களை கொண்டு இரண்டு சுவர்கள் 70 செ.மீ உயரத்திற்கு எழுப்ப வேண்டும். இவ்விரண்டு சுவர்களுக்கு இடையில் 7.5 செ.மீ அளவிற்கு இடைவெளி விட வேண்டும். இவற்றை மூடுவதற்கான மூடி மூங்கில், சாக்கு அல்லது மரத்தில் செய்யலாம். இக்குளிருட்டியை மழை, வெயில் போன்றவற்றில் இருந்து காக்க ஓலையைக் கொண்ட கூரை அமைக்க வேண்டும்.

பயன்படுத்தும் விதம் : தினசரி காலை மற்றும் மாலை தண்ணீர் விட வேண்டும். பழம் மற்றும் காய்களை துளையுள்ள பெட்டிகளில் வைத்து அதன் பின் குளிரூட்டியில் வைக்க வேண்டும்.
தண்ணீர் விடும்பொழுது, காய் மற்றும் பழங்களில் தண்ணீர் சொட்டுகள் விழக்கூடாது. ஏனெனில் அது பூஞ்சை மற்றும் பூச்சி உண்டாக வாய்ப்பை ஏற்படுத்திவிடும். குளிரூட்டியை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொருள்களை வைப்பதற்கு முன் குளிரூட்டியை பூச்சிக்கொல்லி அல்லது பூஞ்சைக்கொல்லிகலை வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

பயன்கள் :

அடுக்கு வாழக்கையை 4-5 நாள் வரை அதிகப்படுத்தலாம். சேமிப்பதற்கு வெளியில் பணம் கொடுப்பதை குறைக்கலாம்.

பொருள் நீடிப்பு நாள்
கீரை 3 (வெயில்)
8-10 (குளிர்க் காலம்)

காய்கறி 5-6 (வெயில்)
10-12 (குளிர்காலம்)

உருளை 97 (வெயில்)

மா 10 (வெயில )

ஆரஞ்சு 50-60 (வெயில்)

Photo ref: Zero energy cooling chamber[ SEEHRA times]

Photo ref: A brick zero energy cool chamber [Eric Verploegen, MIT D-Lab; Rashmi Ekka & Gurbinda Gill, Agribusiness Associates]

மேலும் விவரங்களுக்கு ஜெ.சசிரேகா, மின்னஞ்சல் : sasereka27@gmail.com, இளங்கலை வேளாண்மை மாணவி மற்றும் முனைவர் பா.குணா, உதவி பேராசிரியர், ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர் (உசிலம்பட்டி) மின்னஞ்சல் : balaguna8789@gmail.com ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Spread the love