பெரம்பலூர், மார்ச் 14
பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பூர் வட்டாத்தில் உள்ள காடூர் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் 2021-22 மண் வள அட்டை திட்டத்தின் கீழ் மண் வள மேலாண்மை குறித்த விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், வேளாண்மை அலுவலர் அம்பிகா மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் நெப்போலியன் மற்றும் வேப்பூர் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் மண் வள மேலாண்மை குறித்தும் மண் பரிசோதனை செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். பயிரின் வளர்ச்சிக்கு மண்ணிலுள்ள 16 வகையான சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சத்துக்கள் மண்ணில் உள்ள அளவு மற்றும் அதற்கேற்ப இடவேண்டிய உரங்களின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவ்வாறு சரிவிகித அளவில் உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெற்று மண் வளத்தையும் பாதுகாத்திட இயலும். மண் ஆய்வு செய்து வழங்கப்படும் மண்வள அட்டையில் மண்ணின் கார அமில நிலை மற்றும் உப்புக்களின் அளவு, கரிமச் சத்தின் அளவு ஆகியவை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் விவசாயிகள் மண்ணில் இட வேண்டிய தொழு உரம் மற்றும் நில சீர்திருத்தம் செய்ய வேண்டிய முறைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் முதன்மை சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களின் அளவு அதற்கேற்ப இடவேண்டிய யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஸ் ஆகிய உரங்களின் அளவும் குறிப்பிடப்படுகிறது.
நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மற்றும் போரான் ஆகியவற்றின் மண்ணில் உள்ள அளவும் அதற்கேற்ப மண்ணில் இட வேண்டிய இச்சத்துக்களின் உரங்களின் அளவு குறிப்பிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மண்ணின் கார அமில நிலையை சரி செய்ய ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பு போன்ற போன்ற இடுபொருட்கள் மண்ணில் இட வேண்டிய அளவு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மண் பரிசோதனை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மண் மாதிரிகள் ரூ.20 செலவில் ஆய்வு செய்து பரிந்துரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.