August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம்

பெரம்பலூர், ஆக. 2

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டாத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது. 2022-23ம் ஆண்டில் ஆலத்தூர் வட்டாரத்தில் பாடாலூர், மாவிலங்கை, சிறுவயலூர், சில்லக்குடி, வரகுபாடி, பிலிமிசை, கொட்டரை, குரும்பாபாளையம், புஜங்கராயநல்லூர் மற்றும் ஜமீன் பேரையூர் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்கிராமங்களில் கிராம வரைபடங்க்களின் கட்டங்களின் அடிப்படையில் விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் ஆய்வு செய்து மண் வள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதில் ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகரன், வேளாண்மை அலுவலர் கற்பகம் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் மணிகண்டன் மற்றும் பாடாலூர் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் மண் வள மேலாண்மை குறித்தும் மண் பரிசோதனை செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். பயிரின் வளர்ச்சிக்கு மண்ணிலுள்ள 16 வகையான சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சத்துக்கள் மண்ணில் உள்ள அளவு மற்றும் அதற்கேற்ப இடவேண்டிய உரங்களின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். மண் ஆய்வு செய்து வழங்கப்படும் மண்வள அட்டையில் மண்ணின் கார அமில நிலை மற்றும் உப்புக்களின் அளவு, கரிமச் சத்தின் அளவு ஆகியவை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில விவசாயிகள் மண்ணில் இட வேண்டிய தொழு உரம் மற்றும் நில சீர்திருத்தம் செய்ய வேண்டிய முறைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் முதன்மை சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களின் அளவு அதற்கேற்ப இடவேண்டிய யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஸ் ஆகிய உரங்களின் அளவும் குறிப்பிடப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் போரான் ஆகியவற்றின் மண்ணில் உள்ள அளவும் அதற்கேற்ப மண்ணில் இட வேண்டிய இச்சத்துக்களின் உரங்களின் அளவு குறிப்பிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மண்ணின் கார அமில நிலையை சரி செய்ய ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பு போன்ற போன்ற இடுபொருட்கள் மண்ணில் இட வேண்டிய அளவு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மண் பரிசோதனை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மண் மாதிரிகள் ரூபாய்.20 செலவில் ஆய்வு செய்து பரிந்துரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் பெரம்பலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் க.ரமேஷ், கோ.சௌமியா மற்றும் சு.அகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love