புது தில்லி, ஏப்.23
கோவிட் தொற்றுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிட் தடுப்பு மருந்தை பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் தற்போது வரை கோவாக்சின், கோவி´ல்ட் இரண்டு தடுப்பு மருந்துகள் கோவிட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துக்கு அடுத்த மாதம் முதல் பயன்படுத்த அண்மையில் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.மேலும் பிற நாடுகளில் பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், தங்கள் மருந்தை லாபமில்லா விலையில் இந்தியாவில் பயன்படுத்த அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக ஃபைஸர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கோவிட் தொற்றுக்கு எதிராக அதிக எதிர்வினையாற்றும் தன்மை கொண்ட காரணத்தால் ஃபைஸர் தடுப்பு மருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் உருமாற்றம் அடைந்த தொற்றுகளுக்கு எதிராக பைஸர் தடுப்பு மருந்து சிறந்த பலனை அளித்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.