August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொது முடக்கத்தால் உப்புத் தொழில் பாதிப்பு

நாகப்பட்டினம், மே 11

கரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வேதாரண்யத்திலிருந்து வெளியிடங்களுக்கு உப்பு ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 6,000 ஏக்கர் பரப்பில் உப்பளங்களில் உணவு மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்காக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பணியில், 2 தனியார் நிறுவனங்கள் உள்பட சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

நிகழாண்டு உப்பு உற்பத்தி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது நிலவிவரும் கடுமையான வெயில் உப்பு உற்பத்திக்கு சாதகமாகவும், இதனால், அதிகமாக உற்பத்தியாகும் உப்பை வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதன் காரணமாக உற்பத்தி பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் உப்பு வாரும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தால் லாரிகள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு உப்பு ஏற்றும் பணி திங்கள்கிழமை அன்று முழுமையாக தடைப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நடைமுறையில் இருந்த பொதுமுடக்கத்தின்போது சில நாள்கள் தடைபட்ட உப்பு உற்பத்தி, அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருப்பதால் நிபந்தனைகளுடனான விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாகை மாவட்ட எல்லைகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உப்பு ஏற்ற லாரிகள் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love