June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மகத்தான மகசூலுக்கு தென்னை சாகுபடி செய்திடுவீர்

தென்னை மரம் பல ஆண்டுகள் இருந்து பலன் தரக்கூடிய ஒரு பணப்பயிராகும். தென்னை மரத்திற்கு கற்பகவிருட்சம் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் தென்னை சாகுபடி மற்றும் உற்பத்தியில் இந்தோனேஷியா 16.87 மில்லியன் மெ.டன் உற்பத்தியில் முதல் இடமும் அடுத்தபடியாக இந்தியா 14.70 மில்லியன் மெ.டன் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய அளவில் தழிழ்நாடு உற்பத்தி திறன் மற்றும் சாகுபடியில் முதல் இடத்தில் உள்ளது. 2014-15 ஆம் ஆண்டு தென்னை வளர்ச்சி வாரியத்தின் புள்ளியியல் அளவீட்டின் படி இந்தியாவில் 90 சதவீத உற்பத்தி தென்னிந்தியாவில் கீழ்க்கண்ட நான்கு மாநிலங்கள் முறையே தமிழ்நாடு – 33.84 சதவீதம், கர்நாடகா – 25.15 சதவீதமும், கேரளா – 23.96 சதவீதமும் மற்றும் ஆந்திரா – 7.16 சதவீதம் என முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் தென்னை சாகுபடி பரப்பளவில் கேரளா அதிக பரப்பளவினைக் கொண்ட போதிலும் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. தென்னை அறிவியல் ரீதியாக காக்கஸ் நியூசிபெரே என்று அழைக்கப்படும் அரிகேசியே என்னும் குடும்ப வகையினைச் சார்ந்த மரமாகும். இவற்றில் நாற்பதுக்கும் மேற்பட்ட நெட்டை, குட்டை, நெட்டை குட்டை மற்றும் குட்டை நெட்டை ரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நெட்டை இரகத்தில் கிழக்கு கடற்கரை நெட்டை, மேற்கு கடற்கரை நெட்டை, ஆழியார் 1, 2.3 அதிகளவிலும், குட்டை இரகத்தில் சவ்காட் ஆரஞ்ச் குட்டை, சவ்காட் பச்சை குட்டை, சவ்காட் மஞ்சள் குட்டை மற்றும் மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் ஆரஞ்சு குட்டை இரகங்களும் மற்றும் கலப்பின இரகங்களில் கிழக்கு கடற்கரை நெட்டை சவ்காட் ஆரஞ்ச் குட்டை, மேற்கு கடற்கரை நெட்டை சவ்காட் ஆரஞ்ச் குட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை மலேசியன் மஞ்சள் குட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை மலேசியன் ஆரஞ்சு குட்டை, சவ்காட் ஆரஞ்ச் குட்டை மேற்கு கடற்கரை நெட்டை இரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தென்னை மரமானது நடவு செய்த 3 ஆண்டு முதல் 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் தரக்கூடியது. இதன் தண்டு பகுதி, இலை, காய் என இதன் அனைத்துப் பாகங்களும் பயனளிக்கக் கூடியது. தென்னை நார்க் கழிவு உரமாகவும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. இளநீருக்காக 7-8 மாதங்களிலும் முற்றிய தேங்காய்கள் பெற்றிட 10-11 மாதங்களிலும் சராசரியாக வருடத்திற்கு 4-8 அறுவடை செய்திடலாம். இவற்றில் பலவிதமான சத்துக்கள் (புரதம், மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள்) காணப்படுகின்றன. குறிப்பாக மாங்கனீசு அதிக அளவில் காணப்படுவதால் இவை எலும்புகளின் வளர்ச்சிக்கும், காப்பர் மற்றும் இரும்புச் சத்துக்கள் இரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இத்தகைய பலன் தரக்கூடிய தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து பலன் அடைந்திடலாம்.

தமிழகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக 23 அரசு தென்னை நாற்றுப் பண்ணைகள் மூலம் தரமான மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய நெட்டை, குட்டை, நெட்டை குட்டை மற்றும் குட்டை நெட்டை இரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரத்தில் எஸ்.வி.மங்களம் கிராமத்தில் அரசு தென்னை நாற்றுப் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு நெட்டை மற்றும் நெட்டை குட்டை கலப்பின தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நெட்டை இரகம் ரூ.60க்கும், நெட்டை குட்டை இரக கலப்பினகக் கன்று ரூ.125/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தென்னை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தெரிவித்தார்.

Spread the love