August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்

புதுக்கோட்டை, மே 7

புதுக்கோட்டை வட்டாரத்தில் மக்காச்சோளம் முக்கிய வேளாண் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. மக்காசோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : மக்காசோளம் பயிரிடும் விவசாயிகள் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவதாக கோடை மழை பெய்தவுடன் அந்த ஈரத்தை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் படைப்புழு மற்றும் இதர புழுக்களின் கூண்டுப் புழுக்கள் மேலே வந்து சூரிய வெப்பத்தாலும் பறவைகள் சாப்பிடுவதாலும் அழிக்கப்படுகின்றன. கடைசி உழவின் போது எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்வது விதைக்கும் போது படைப்புழுவின் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும். ஒரு கிலோ விதைக்கு தயோமீத்தாக்ஸம் 30 எப் எஸ் 10 கிராம் அல்லது பெவேரியா பேசியானா 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்யலாம். மக்காச்சோள விதையினை விதைப்பு செய்யும் போது பத்து வரிசைக்கு 75 செ.மீ விதைப்பு இடைவெளி விட்டு விதைப்பு செய்ய வேண்டும். இதனால் பூச்சி மருந்து தெளிக்கவும் இதர பணிகளுக்கும் தடையின்றி சென்று வர ஏதுவாக இருக்கும். வரப்பு பயிராக தட்டை பயறு, எள், சூரிய காந்தியை பயிரிடுவதனால் படைப்புழுவின் தாக்குதலை தவிர்க்கலாம். எக்டருக்கு 12 எண்கள் இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்தலாம். மேலும் எக்டருக்கு ஒரு சூரிய விளக்குப் பொறியினை வைக்கும் போதும் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கப்படுகின்றது. மக்கச்சோள இளம்பயிர்களில் காணப்படும் முட்டை குவியல்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்.

அதிகளவில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் காணப்பட்டால் வேளாண்மைத் துறையினரின் ஆலோசனையின் படி இரசாயாண பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் வயல்களில் தென்பட்டால் அசார்டிராக்டின் 1500 பிபிஎம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 5 சத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்க வேண்டும். படைபுழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலையினை அடையும் போது குளோரான்டிரினிபுரோல் 18.5 சத எஸ்.சி என்ற பூச்சிக் கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 80 மிலி என்ற அளவிலும் அல்லது ஸ்பைனிடோரம் 11.7 சத எஸ்.சி என்ற மருந்தை ஏக்கருக்கு 100 மிலி என்ற அளவிலும் அல்லது எமாமெக்டின்பென்ஸயேட் 5 சத எஸ்.ஐp என்ற பூச்சிக்கொல்லியினை ஏக்கருக்கு 80 கிராம் அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து படைப்புழு தாக்குதலிருந்து மக்காசோளப் பயிரை பாதுகாத்து அதிக மகசூல் பெற்று பயன் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Spread the love