திண்டுக்கல், ஜூன் 22
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளமானது பெருவாரியாக பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோளப் பயிரில் நுண்ணூட்டமேலாண்மையின் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட விதைப்பரிசோதனை நிலைய, விதைப்பரிசோதனை அலுவலர் இரா.இராமசாமி, வேளாண்மை அலுவலர்கள் ப.பிரபாகரன் மற்றும் ம.ஜமுனாராணி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது : திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளமானது மானாவரியாக ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திலும், இறவைப் பயிராக தை மற்றும் சித்திரை பட்டத்திலும் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளமானது சிறுதானியங்களில் ஓர் முக்கியப் பயிராகும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை உட்கொள்ளுவதன் மூலம் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இது வளர்வதற்க்கு குறைந்த அளவு நீர் மற்றும் பிற மேலாண்மைகள் தேவைப்படுவதால் விவசாயிகளால் அதிகம் யிரிடப்படுகிறது. இருப்பினும் நுண்ணூட்ட மேலாண்மையை சரிவரக் கையாளுவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்.
நுண்ணூட்ட மேலாண்மை :
· 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 37.5 கிலோ மணலுடன் நன்கு கலந்து நேரடியாக நிலத்தில் இடலாம்.
· தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணூட்டக் கலவையை (30கிலோ/ஹெ) தொழு உரத்துடன் 1:10 என்ற விகிதத்தில் கலந்து ஒருமாத காலத்திற்கு செறிவூட்டம் செய்து பின்பு நிலத்தில் இடலாம்.
· துத்தநாகக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய 25 கிலோ துத்தநாகசல்பேட்டை நிலத்தில் இடலாம் அல்லது 0.5% துத்தநாக சல்பேட்டை இலைகளின் மீது தெளிக்கலாம்.
· இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 1% பெர்ரிக் சல்பேட்டை விதைத்ததிலிருந்து 30, 40 மற்றும் 50 நாட்களி;ல் இலைகளின் மீது நேரடியாக தெளிக்கலாம்.
· கந்தகச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய ஹெக்டேருக்கு 40 கிலோ கந்தகத்தை நிலத்தில் இடலாம்.