August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு மேலாண்மை முறைகள்

இயற்கைக்கு மாறாக விவசாயத்தில் அதிக அளவில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதாலும், ஒரே பயிரை அதிக பரப்பில் பயிரிடுவதாலும், மாற்றுப் பயிர் செய்யாததாலும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிக அளவில் பரவி பயிர்களை மிகுதியாக சேதப்படுத்துகின்றன. இந்த வகையில் சமீபத்தில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும், புதிய வகை அந்நிய நாட்டுப் பூச்சியான மக்காச்சோளப் படைப்புழுவின் தாக்குதல் தமிழ்நாட்டில் 2018 முதல் கண்டறியப்பட்டது. இவ்வகைப் படைப்புழுவால் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் பெருமளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

தாக்கும் பயிர்கள்
இந்த படைப்புழுவானது மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், கரும்பு, சோளம், இனிப்பு மக்காச்சோளம், புல்வகை பயிர்கள், பருத்தி, சிறுதானியங்கள், நிலக்கடலை, புகையிலை போன்ற 80 வகையான பயிர்களை சேதப்படுத்தக் கூடியது. ஆகையால் இப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி, தாக்கப்படும் முறைகள், பாதிப்புகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

வாழ்க்கை சுழற்சி
மக்காச்சோள படைப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சியில் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் அந்துப்பூச்சி என நான்கு பருவங்கள் உள்ளன. தட்பவெப்பநிலை சராசரியாக 28 சென்டிகிரேட் இருக்கும் பொழுது படைப்புழு 30 நாட்களில் அதன் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்யும். அதிக எண்ணிக்கையில் இப்புழுக்கள் இருக்கும்பொழுது, ஒரு இடத்தில் சேதத்தை உண்டாக்கிய பின், மற்ற இடங்களுக்கு உணவு தேட படை படையாகச் செல்வதால் இப்புழுக்கள் படைப்புழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

படைப்புழு பெரும்பாலும் மண்ணில் 2-8 செ.மீ ஆழத்தில் கூட்டுப்புழுவாக மாறுகின்றது. பெண் அந்துப்பூச்சியின் சராசரி வாழ்நாள் 12-14 நாட்கள் ஆகும். மேலும், அதன் வாழ்நாளில் 800 முதல் 1500 முட்டைகள் வரை இடும். குறைந்தது 450-1500 கி.மீ வரை பறந்து சென்று புதிய இடங்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

பாதிப்பு அறிகுறிகள்

Ø மக்காச்சோளப் பயிரின் இளம் இலைகளின் அடிப்பகுதியில் முட்டைக் குவியல்கள் காணப்படும். பெண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பொழுது, களைச்செடிகளிலும் முட்டைகளை இடும்.

Ø முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டாக்கும். அதனால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாகக் காணப்படும்.

Ø இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கும் பரவும் தன்மையுடையது.

Ø இவ்வகைப் படைப்புழுக்கள் இரவு நேரத்தில் இளம் மக்காச்சோளப் பயிர்களின் இலைகளை தாக்குவதால் இலைகள் விரிவடையும் பொழுது வரிசையாக துளைகள் தென்படும். மேலும், முதிர்ந்த பயிர்களின் கதிர்களையும் தாக்குகின்றன.

Ø கதிர் உருவானதற்குப்பின் படைப்புழுக்கள் கதிரின் மேலுள்ள உறைகளையும், கதிர்களையும் சேதப்படுத்துகின்றன.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை:-

  1. மக்காச்சோளம் விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்வது அவசியம்.
  2. விதைப்பதற்கு முன் மண்ணில் வேப்பம் புண்ணாக்கு ஒரு எக்டருக்கு 250 கிலோ இட வேண்டும்.
  3. மக்காச்சோள வயலில் 3-4 வரிசை வரை வயலை சுற்றிலும் வரப்பு பயிராக தட்டைப்பயிரை நடவு செய்வதன் மூலம் வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள், தரை வண்டுகள் மற்றும் நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து படைப்புழுக்களை அழிக்கலாம்.
  4. இறவையில் தட்டைப்பயிர், எள், துவரை அல்லது சூரியகாந்தி மற்றும் மானாவாரியில் தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும்.
  5. மக்காச்சோளம் விதைகளை விதைப்பதற்கு முன் இரசாயன பூச்சிக்கொல்லியான சய்யன்டிரானிலிபுரோல் 19.8 சதம் + தையோமீதாக்சம் 19.8 சதம் @ 4 மில்லியை ஒரு கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மக்காச்சோளம் பயிரை 15 நாள் வரை படைப்புழு தாக்குதல் வருவதை தடுக்க முடியும்.
  6. ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறியைப் பயன்படுத்தி வயலில் உள்ள அனைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இதனை மக்காச்சோளம் நடவு செய்து 7 நாட்களுக்குள் வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சி செடிகளில் முட்டையிடும் முன் பொறியில் கவரப்பட்டு அழிக்கப்படும்.
  7. ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் விளக்குப் பொறியை வைத்து ஆண் மற்றும் பெண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  8. நடவு செய்து 15 முதல் 20 நாள் வரை குளோரன்ட்ரானிலிப்ரோல் 18.5 SC 4 மில்லி அல்லது ஃப்ளூபெண்டைமைடு 20 WG 5 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  9. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக தாக்குதல் 35 முதல் 40 நாள் வரை தென்பட்டால் மெட்டாரைசியம் என்னும் நன்மை செய்யும் பூஞ்சாணம் 1 எக்டேருக்கு 1 கிலோ அல்லது இரசாயன பூச்சிக்கொல்லி ஸ்பைனிட்டோரம் 11.7 SG 5 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 SG 4 கிராம் அல்லது நோவலூரான் 10 EC 15 மில்லி இதில் ஏதாவது ஒன்றினை 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
  10. மூன்றாம் கட்ட நடவடிக்கையாக 60 நாட்களுக்கு மேல் ஸ்பைனிட்டோரம் 11.7 SG 5 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 SG 4 கிராம் இதில் ஏதாவது ஒன்றினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் மேற்கொண்டால் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்களின் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தலாம். மேலும் விதைப்புக்கு முன் தரமான சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் மக்காசோளப் பயிர் வகைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஈரப்பதம் 12%, சுத்தத்தன்மை 98%, முளைப்பத்திறன் 90% உள்ளதா என விதைப் பரிசோதனை மேற்கொண்ட பின்பு பயிரிட்டால் பயிர் எண்ணிக்கையை பராமரித்து அதிக மகசூல் பெறலாம் என்று மதுரை விதைப் பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி மற்றும் வேளாண் அலுவலர்கள் இராமசாமி, சாய்லட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Spread the love