May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சள் ஏலத்திற்கு விடுமுறை

ஈரோடு, மே 11

கரோனா பொது முடக்கத்தால் ஈரோடு பகுதியில் நடைபெறும் மஞ்சள் ஏலத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவுச் சங்கங்கள் என 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடத்தப்படும். இதேபோல ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கும் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா பரவலுக்கான முழு பொதுமுடக்கம் மே 10ல் துவங்கி மே 24ம் அதிகாலை 4 மணி வரை தொடர்கிறது. இந்நேரத்தில் மஞ்சள் நீங்கலாக பிற விளைபொருள்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது : ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை நடைபெற்று வருகிறது. மஞ்சள் வரத்தும் தற்போது சீராக உள்ளது. இந்நிலையில் கரோனா பொது முடக்க நிலையில் மஞ்சளை விற்பனைக்குக் கொண்டு வரும் விவசாயிகள், வாங்க வரும் வியாபாரிகளின் நலன்களையும் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தவிர அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதன்படி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த ஒரு வாரத்துக்கு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மே 17ம் தேதி முதல் மஞ்சள் ஏலம் நடத்தலாமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Spread the love