June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணை வளப்படுத்தும் திரவ உயிர் உரங்கள் : வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, ஜூன் 13

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், சாகுபடி செலவை குறைத்து கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

உயிர் உரங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது. மேலும் அருகில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு அளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டாரத்தில் குடுமியான்மலையில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 55 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கூடுதல் லாபம்
இந்த மையத்தில் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போபாக்டீரியா, திரவ அசோபாஸ், மற்றும் திரவ பொட்டாஷ் என 7 வகையான திரவ உயிர் உரங்கள், அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைவதோடு கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. உயிர் உரங்கள் பாக்கெட்டுகளில் திடவடிவில் விநியோகிக்கப்படுகிறது. அதனை 6 மாதங்கள் வரை மட்டுமே திறன் மிகு நிலையில் பயன்படுத்த இயலும். அதன் பிறகு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும். ஆனால் திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும். மேலும் நுண்ணுயிரிகளின் அடர்த்தி திட உயிர் உரங்களை விட திரவ உயிர் உரங்களில் கூடுதலாகவும் இருக்கும். அகில இந்திய அளவில் தமிழகத்தில் தான் முதன்முறையாக பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் இணை ஓட்ட திரவவடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

விதை நேர்த்தி

அசோஸ்பைரில்லம் உயிர் உரமானது நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களுக்கும், ரைசோபியம் உயிர் உரமானது நிலக்கடலை, பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலைப்படுத்தவும், பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது அனைத்து பயிர்களுக்கும் மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யவும் மற்றும் திரவ பொட்டாஷ் உயிர் உரமானது மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்க செய்யவும் பயன்படுத்தலாம். உயிர் உரங்களை பயன்படுத்துவதால், பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணில் உயிரியல் செயல்;பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக் கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளிபடாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்பு தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகரலாபத்தை அதிகரித்திட புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்

Spread the love