August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணை வளமாக்கும் மண்புழு உர தொழில்நுட்பப் பயிற்சி

இராமநாதபுரம், ஆக. 4

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தினால் மண் புழு உரத் தொழில்நுட்ப பயிற்சியானது ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு முனைவர் தி.ராகவன், பேராசிரியர் மற்றும் தலைவர், தலைமையேற்று பசுமைப் புரட்சியைக் குறித்தும், இந்தியா உணவு உற்பத்தியில் அடைந்த தன்னிறைவு குறித்தும், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறித்தும் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பற்றியும் உரையாற்றினார்.

பயிற்சியின் தொடக்கமாக முனைவர் ஜே.பிரபாகரன் மண் புழுக்களைப் பற்றியும், வேளாண் மற்றும் வீட்டு திடக்கழிவுகளைப் பற்றியும் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். முனைவர் த.பாலாஜி, மண்ணைப் பற்றிய ஒர் அறிமுகத்துடன் மண்ணிற்கு தேவையான 16 வகையான ஊட்டச்சத்துகளைப் பற்றியும் மற்றும் மண்புழு உரம் இடுவதால் மண்ணில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். முனைவர் க.இளஞ்செழியன், மாணவர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளைப் பற்றியும் மற்றும் மண் புழுக்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது குறித்தும் பூச்சிகளின் படங்களோடு மாணவர்களுக் குகாண்பித்தார். பின்பு மாணவர்களுக்கு முனைவர் ஜே.பிரபாகரன் மற்றும் ஆன்ந்தபாய், மண்புழு உரத் தயாரிப்பு பற்றிய செயல் விளக்கமானது நேரடியாக மாணவர்களுக்கு செய்து காட்டப்பட்டது. மாணவர்கள் ஆப்பிரிக்க வகை மண் புழுக்களான யூடிரில்லஸ், யூஜினியே, ஐசானியாபோடிடா மற்றும் இந்திய மண் புழுவினமான பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் ஆகியவற்றை நேரடியாக பார்த்து அவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டனர். பல்வேறு வகையான வேளாண் கழிவுகளையும், மரத்தின் கழிவுகளையும் மற்றும் வீட்டு கழிவுகளையும் எவ்வாறு தெரிவு செய்வது என்பதையும் அதை மக்க வைக்கும் முறைகளையும் நேரடியாக கண்டும் செய்தும் புரிந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு “சிறப்பு சான்றிதழ்கள்” மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கு பெற்ற சான்றிதழ்களும் முனைவர் தி.ராகவன், பேராசிரியர் மற்றும் தலைவரால் வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஷிபான் நூர் பள்ளியிலிருந்து என்.சாகுல் ஹமீது, கார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகிய ஆசிரியர்களும் மற்றும் 37 மாணவ, மாணாக்கியரும் (9 மற்றும் 11 ம் வகுப்பு) பங்கு பெற்று ஒரு நாள் மண் புழு உரத் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்றனர்.

Spread the love