August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்புழு உரத்தின் அவசியம்

வறட்சி தாங்கும் திறன் தருவதற்கு மரஞ்செடிகள் வேரின் வளர்ச்சியை அதிகரித்திட வேண்டும். இதற்கு நன்மை செய்யும் உயிர் உரங்கள் பல உள்ளன. குறிப்பாக அதிக அளவில் வேர் வளர்ச்சியை ஊக்குவித்திட மண்புழு உரக்கலவையுடன் நன்மை செய்யும் உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா முதலியவற்றை கலந்து “வெர்மி மிக்ஸ்” தயாரித்து ஒவ்வொரு மரஞ்செடிக்கும் தொடரந்து தந்து வந்தால் வறட்சியால் கூட மாமரம் காய்ந்து போகாது. நல்ல மகசூல் தந்து பச்சைப் பசேல் என ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம். மாவிற்கு உரிய பயிர் பாதுகாப்பு முறைகள் பல உள்ளன. குறிப்பாக இயற்கை வேளாண் உத்திகளில் வேப்பம் பிண்ணாக்கு பயன்பாடு, தாவரக் கரைசல் தெளிப்பு, பஞ்சகவ்யா, தசகவ்யா மற்றும் மண்புழுக் குளியல் நீர் தெளிப்பு முதலியன நன்மை தருபவை.

மாந்தோப்பில் தேவையற்ற நோய் தாக்கிய கிளைகளைக் கழித்து கவாத்து எனப்படும் உத்தியைக் கட்டாயம் கடைபிடிப்பது நன்று. அந்த வெட்டுப்பட்ட இடத்தில் போர்டோ கலவை பூச்சு பூசுதல் நன்று. “பூ” பூத்த தருணம் நிச்சயம் நீர்ப்பாசனம் இருந்தால் காய் பிடித்திடல் எளிதாகும். அரசினால் பரிந்துரைக்கப்பட்டபடி ஒரு மரத்துக்கு முதல் ஆண்டு 10 கிலோ தொழு உரம், மண்புழு உரம் 1 கிலோ, 440 கிராம் சூப்பர் 1250 கிராம் மற்றும் பொட்டாஷ் 480 கிராம் தேவை. 5ஆம் ஆண்டு வரை இவற்றை ஆண்டு தோறும் படிப்படியாக இதே அளவு உரத்தைக்காட்டி இட வேண்டும். மேலும், 5 ஆண்டுக்கு மேல் வயதுடைய மா மரத்துக்கு 5 கிலோ மண்புழு உரம் யூரியா 2.200 கிலோ, சூப்பர் 6.20 கிலோ மற்றும் பொட்டாஷ் 2.900 கிலோ இட வேண்டும். மானாவாரி “மா” மரத்துக்கு அதிக அளவு மண்புழு உரம் இட்டு உரிய நீர் மண்ணில் உள்ள தருணம் உரங்களை மழை பெறும் தருணம் பிரித்தும் இடலாம். தற்போது மழை பெய்தால் தோப்பினை நன்கு உழுது நீர் சேமிப்பும் செய்யலாம். துல்லியமாக அடர் நடவு முறை கடைபிடித்து நீரில் கரையும் உரங்கள் அளிப்பதன் மூலம் நீடித்து நிலையான உச்சகட்ட மகசூல் பெற்று கட்டு கட்டாய் காசு பார்க்கலாம். கட்டாயம் மா மரத்தை நிழல் தரும் மரமாக மாடுகளைக் கட்டிட உதவும். மரமாக இலைகள், கிளைகள் கூடாரம் போல நிரம்பி இருக்கும்படி கவாத்து செய்யாமல் இருப்பின் பலன் மிக மிக குறைவே.

மேலும் விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : டாக்டர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

Spread the love